×

மத நல்லிணக்கத்திற்கான `கபீர் புரஸ்கார்’ விருது வீர, தீர செயல்களுக்கான `அண்ணா பதக்கம்’: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வீர, தீர செயல்களுக்கான ”அண்ணா பதக்கம்” தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ₹1 லட்சத்துக்கான  காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.  வீர, தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.2022ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9  என்ற முகவரிக்கு வருகிற 15.12.2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கலாம்.

அதேபோன்று, சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ”கபீர் புரஸ்கார்” விருது, ஒவ்வொரு ஆண்டும், முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இப்பதக்கத்தினை பெறத் தகுதியுடையவராவர்.  இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது.  முறையே ₹20,000, ₹10,000 மற்றும் ₹5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். இந்த விருது பெற தகுதியானவர்கள் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Tags : Kabir Puraskar Award for Religious Reconciliation, Anna Medal
× RELATED இன்று காலை 11 மணி முதல் 3 வரை...