×

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு: நீலகிரி கலெக்டரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: தமிழக அரசின் கோரிக்கை ஏற்ற உச்சநீதிமன்றம் நீலகிரி கலெக்டரை இடமாற்றம் செய்ய அனுமதி அளித்துள்ளது. நீலகிரியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதிகளாக உள்ளதால் யானைகளின் வழித்தடங்களை மறித்து கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு போன்ற பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் ஓட்டல்கள், விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விதிமுறை மீறி கட்டப்பட்ட விடுதி, ஓட்டல்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், யானைகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, ஆட்சியரும் விதிமுறை மீறி கட்டப்பட்ட ஓட்டல்கள், கட்டிடங்கள், ரிசார்ட்டுகளை ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், மாவட்ட ஆட்சியரை வேறு எங்குமே இடமாற்றம் செய்ய முடியாத நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு, நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினர்.


Tags : Government of Tamil Nadu ,Supreme Court ,Nilgiris Collector , Government of Tamil Nadu's request accepted: Supreme Court allows transfer of Nilgiris Collector
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...