×

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்‍க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்..!!

ஜெய்ப்பூர்: பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்‍க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதண கலால் வரியை மத்திய பாஜக அரசு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு மீண்டும் உயர்த்திவிடும் என்றும் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்து மத்திய பாஜக அரசு கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வலியுறுத்தியது. 25 மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தபோதும் தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மறுத்துவிட்டன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Rajasthan ,Chief Minister ,Ashok Gelad , Petrol, Diesel Prices, Union Government, Ashok Gelad
× RELATED கட்சியில் இருந்து வெளியேறிய துரோகியை...