×

‘‘உன்னை நாங்க காப்பாத்தியே ஆகணும்!’’ முட்டியளவு வெள்ளத்தில் இருந்து மீட்டு வந்து அதே தண்ணீரில் இறக்கிவிட்ட பாஜவினர்: நாகர்கோவிலில் மீட்புப்பணி வீடியோ வைரல்

நாகர்கோவில்: முட்டளவு தண்ணீரில் இருந்து டியூப் ஒன்றில் ஒருவரை மீட்டு வந்து அதே தண்ணீரில் அவரை இறக்கிவிடும் பாஜ எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை மழைக்கால நிகழ்வுகளின் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் பாஜ தலைவர் அண்ணாமலை  கணுக்கால் அளவு தண்ணீர் உள்ள பகுதி ஒன்றில் படகில் சென்று போட்டோ ஷூட் எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன் அரசியல் கட்சியினரிடையே பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரியிலும் இதனை போன்று பா.ஜ.வினரின் மீட்பு பணி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காற்றடைத்த டியூப் ஒன்றில் முட்டளவு தண்ணீரில் இருந்து ஒருவரை மீட்டு வருகின்றனர். அவரை பின்னர் அதே முட்டளவு வெள்ளத்தில் இறக்கிவிடுகின்றனர். அவர் அந்த தண்ணீருக்குள்ளே பின்னர் நடந்து செல்கிறார். அவருடன் அனைவரும் அங்கிருந்து கரைக்கு திரும்புகின்றனர். இதனை உயரமான பகுதியில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் நடைபெறுகின்ற இந்த மீட்பு பணிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நெட்டிசன்கள் அதனை ‘‘உன்னை நாங்க காப்பாத்தியே ஆகணும்’’, ‘‘நான்கூட அவர் நடக்க முடியாதவர் என்று நினைத்தேன்’’, ‘‘உங்க அக்கப்போர் தாங்க முடியல’’ என்று பலவாறாக பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இதனை போன்று தெரு ஒன்றில் ஆறுபோல் பாய்ந்தோடும் மழை தண்ணீரில் பெண்களும், சிறுவர் சிறுமியர்கள் விளையாட்டாக நீந்தி செல்லும் வீடியோ, பெண் ஒருவர் தனது வீட்டு முன்பு அமர்ந்து சாலையில் ஆறாக பாயும் தண்ணீரில் துணி துவைத்துக்கொண்டு இருப்பது போன்ற வீடியோக்களும் குமரி மாவட்ட மழை காட்சிகளாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags : Bazaar ,Nagargov , ‘We will be your savior, flood, BJP, Nagercoil, rescue operation`
× RELATED பாண்டி பஜாரில் 222 கிலோ வெள்ளி பொருட்கள்...