நீதிமன்ற வளாகத்தில் காவலாளி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை, தபால் நிலையம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு, வேலூர் மாவட்டம், காட்பாடி அக்கரஹாரம், பழைய தெருவை சேர்ந்த கோவிந்தசாமி (58), காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கோவிந்தசாமி, இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீதிமன்றத்திற்கு யாரும் வரவில்லை. இந்நிலையில், மதியம் சிலர் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றபோது, அங்குள்ள ஒரு மரத்தில் கோவிந்தசாமி தூக்கில் சடலமாக தொங்குவது தெரிந்தது. இதுபற்றி, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, அங்கு கோவிந்தசாமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘‘எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டது. எனக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளது. என்னால் அதை சமாளிக்க முடியவில்லை. இதனால், தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை மனைவி, மகனிடம் ஒப்படைக்கவும். மேலும், எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு முதல்வர் நல்ல வேலை கொடுக்க வேண்டும்,’’ இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: