×

மின்தடை மற்றும் கழிவுநீர் அகற்றாததை கண்டித்து 9 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பூர்: கன மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல், பல இடங்களில் கடந்த 7 நாட்களுக்கு மேலாக மின் தடை செய்யப்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் மின்தடை மற்றும் கழிவுநீர் அகற்றப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல், டிகாஸ்டர் சாலை பகுதியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பேசின்பிரிட்ஜ் காந்தி நகர் பகுதியில் மின் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் கடந்த 7 நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதை கண்டித்தும், மின் விநியோகம் செய்யக் கோரியும் அப்பகுதி மக்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை மங்களபுரம் சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். ஓட்டேரி  போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதி மக்கள் மற்றும் திருவேங்கடசாமி பகுதி மக்கள் ஒரு வாரமாக மின் தடை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, நேற்று காலை பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புளியந்தோப்பு 1வது தெரு பகுதி மக்கள் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி புளியந்தோப்பு நெடுஞ்சாலை கிரே நகர் சந்திப்பு பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புளியந்தோப்பு டிம்லஸ் ரோடு சந்திப்பில் தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு ராமசாமி தெருவில் மின்தடை மற்றும் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து புளியந்தோப்பு காவல் நிலையம் முன்பு நேற்று சாலை பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags : Public road blockade in 9 places condemning non-removal of electricity and sewage
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...