×

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் 50 சதவீத வேட்டி உற்பத்தி நிறைவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில்  பொங்கல் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் அரசின்  சார்பில் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில்  இத்திட்டத்தின் மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலைகள் உற்பத்தி  செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட  பல்வேறு மாவட்டங்களில் உள்ள விசைத்தறி கூடங்களில் இலவச வேட்டி, சேலைகள்  உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 67  லட்சம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 76  சொசைட்டிகள் மூலம், இப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

கூட்டுறவு நூற்பாலை  மற்றும் சொசைட்டிகளில் ஏற்கனவே இருப்பில் இருந்த நூல் வைத்து 27 சதவீத  சேலைகள், 50 சதவீத வேட்டிகள் உற்பத்தி செய்து முடிக்கப்பட்டுள்ளது.  உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் பேக்கிங் செய்யப்பட்டு விரைவில்  ஆர்டர்களின் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நூல் தட்டுப்பாடு மற்றும்  கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பணி சற்று பாதிக்கப்பட்டுள்ளதால்  இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.



Tags : The scheme of providing free Vetti saree is 50 per cent completed by Vetti production
× RELATED சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது...