×

குளறுபடிகளை சரி செய்து வருவாய் அதிகரிக்க வழிகாட்டி மதிப்பு திருத்த பணிகள் தீவிரம்: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: பத்திர பதிவுத்துறையில் வருவாய் அதிகரிக்கும் வகையில் வழிகாட்டி மதிப்பில் குளறுபடிகளை சரி செய்ய வழிகாட்டி மதிப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்டன. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு இந்த நடைமுறையே பின்பற்றி வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில், 2017ம் ஆண்டு, 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளில் ஒட்டுமொத்தமாக 33 சதவீதத்தை குறைத்து அரசு உத்தரவிட்டது. இந்த வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்ததால் 2012ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளே அமல்படுத்தப்படும் என கடந்த 2023ம் ஆண்டு ஏப்.1ம் தேதி பதிவுத்துறை அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பதிவுத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றது. 2017ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் வழிகாட்டி மதிப்புகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்து வருமானத்தை அதிகரிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு பதிவேடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பு சீரமைத்தல் என்பது வருவாய்துறை உள்ளிட்ட பிற துறைகளோடு ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணிகள் ஆகும். மைய மதிப்பீட்டு குழுவின் வழிகாட்டுதலின்படி மாவட்ட துணைக்குழுவில் உள்ள உறுப்பினர்களான வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒருங்கிணைந்து வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும். லட்சக்கணக்கான சர்வே எண்கள் பல்லாயிரக்கணக்கான தெருக்கள் உள்ள நிலையில் வழிகாட்டி மதிப்பினை மாற்றம் செய்யும் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வாரம் முழுவதும் இந்த பணிகளை மேற்கொள்கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் இதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கிறது. அண்மையில் பதிவுத்துறை தலைவர் மண்டல வாரியாக இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்தார். விரைவில் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post குளறுபடிகளை சரி செய்து வருவாய் அதிகரிக்க வழிகாட்டி மதிப்பு திருத்த பணிகள் தீவிரம்: பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...