×

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு: பள்ளியில் உள்ள ரகசிய அறையை திறந்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சென்னை: சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், மேலும் ஒரு போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிவசங்கர் பாபாவின் கைரேகையை பதிவு செய்து ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் ‘சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி’ இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் நிறுவனராக பிரபல நடன சாமியாரான சிவசங்கர் பாபா(72) உள்ளார்.

இவர் மீது அப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளை ஆசிர்வாதம் வழங்குவதாக கூறி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தரங்க அறைக்கு அழைத்து ெசன்று பாலியல் தொந்தரவு செய்ததாக முன்னாள் மாணவிகள் பலர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் 8 முதல் 12ம் வகுப்பு மாணவிகளை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மாமல்லபுரம் அனைத்து காவல் நிலைய போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சிவசங்கர் பாபாவால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதைதொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு கடந்த ஜூன் 13ம் தேதி மாற்றப்பட்டது. பிறகு சிபிசிஐடி போலீசார் டெல்லியில் மறைந்து இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிவசங்கர் பாபாவை பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த அந்தரங்க அறையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 லேப்டாப், 2 கணினிகளில் இருந்து ஏராளமான வீடியோ மற்றும் ஆபாச புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக பள்ளி ஆசிரியைகளான பாரதி மற்றும் தீபா, சுஷ்மிதா ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே கடந்த மாதம் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே இவர் மீதான முதல் போக்சோ வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கையும் முடியும் தருவாயில் உள்ளது. நான்காவது வழக்கு மீது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பாதிக்கப்பட்ட, அந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 5வது போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 5வது வழக்கிலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பள்ளியில் உள்ள ரகசிய அறையில் முக்கிய ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் சிக்க வாய்ப்புள்ளது. சுசில் ஹரி பள்ளியில் உள்ள அந்த ரகசிய அறையை இன்னும் ஓரிரு நாளில் சிபிசிஐடி திறக்க முடிவு செய்துள்ளது. சிவகங்கர் பாபாவின் கை ரேகை பதிவு  இருந்தால் மட்டுமே ரகசிய அறையை திறக்க முடியும். எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தின் அனுமதியோடு  பள்ளி அறையை திறக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Shiva Sankar ,Papa ,CPCID , Sivasankar Baba more on a Pokso case: Opening the Secret room in school and inquire
× RELATED பார்வையற்ற ஆசிரியர் எழுதிய ‘பாடி...