×

நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு: முதல் போட்டிக்கு ரகானே கேப்டன்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் டெஸ்டில் விராத் கோஹ்லிக்கு பதிலாக அஜிங்க்யா ரகானே கேப்டனாக செயல்பட உள்ளார். உலக கோப்பை டி20 தொடர் முடிந்ததும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகி விட்டதால், ரோகித் ஷர்மா தலைமையில் டி20 ஆட்டங்களுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

டி20 தொடர் முழுவதும் கோஹ்லி, ஷமி, பும்ரா உள்ளிட்ட  வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நியூசிலாந்துக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் டெஸ்ட்டில் கோஹ்லி விளையாட மாட்டார் என்பதால், அந்த போட்டிக்கு கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணை கேப்டனாக செயல்படுவார்.  டெஸ்ட் தொடரில், முன்னணி வீரர்கள் ரோகித், பன்ட், பும்ரா, ஷமி ஆகியோருக்கு  ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர்களாக விருத்திமான் சாகாவுடன் ஆந்திராவை  சேர்ந்த புதுமுகம்  கே.எஸ்.பரத்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷ்ரேயாஸ் அய்யரும் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் (25 வயது) புதுமுக வீரராக இடம் பிடித்துள்ளார். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு  பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹனுமா விகாரி,  அபிமன்யூ ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூரியகுமார் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஓய்வு  பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்  நியூசிக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்க உள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி: அஜிங்க்யா ரகானே (முதல் டெஸ்ட் கேப்டன்),  விராத் கோஹ்லி (2வது டெஸ்ட் கேப்டன்),  கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், செத்தேஷ்வர் புஜாரா, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சாகா (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா,  ஆர்.அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ்,  இஷாந்த் ஷர்மா,  உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Tags : New Zealand ,Ragane , Test series with New Zealand; Retirement for leading players in the Indian team: Raghane captain for the first match
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.