×

ராகுல் காந்தி அதிரடி பேச்சு; இந்துவும், இந்துத்துவாவும் வேறு வேறு: காங்கிரஸ் சித்தாந்தத்தை பாஜ மூடி மறைப்பதாக ஆவேசம்

புதுடெல்லி: ‘இந்துவும், இந்துத்துவாவும் வெவ்வேறு கோட்பாடுகளை கொண்டவை. சீக்கியர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் இந்துத்துவா தாக்குதல் நடத்தும்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘ஜன் ஜக்ரன் அபியான்’ என்ற தலைப்பில் 4 நாள் தேசிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மகாராஷ்டிரா மாநிலம், வர்தாவில் நேற்று தொடங்கியது. இதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஒன்று, காங்கிரசின் சித்தாந்தம் மற்றொன்று ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். இன்றைய இந்தியாவில் வெறுப்பை பரப்பும் பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் சித்தாந்தத்தையும்  நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதனால், காங்கிரசின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத சித்தாந்தத்தை, பாஜவின் சித்தாந்தம் மூடி மறைத்து விட்டது. நமது சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனும், துடிப்புடனும் தான் உள்ளது. ஆனால், அது பாஜ.வால் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஒட்டு மொத்த மீடியாக்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் தன் கைக்குள் பாஜ வளைத்துப் போட்டிருப்பதே காரணம். நாம் நம் சித்தாந்தத்தை மக்களிடம் தீவிரமாக கொண்டு செல்லாததும், மூடி மறைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகும். இந்துவும், இந்துத்துவாவும் வெவ்வேறு கோட்பாடுகளை கொண்டவை. இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் இந்து எனில், பின்பு ஏன் இந்துத்துவா என்ற பெயர் தேவைப்படுகிறது? எதற்காக உங்களுக்கு புதிய பெயரை சூட்டிக் கொள்கிறீர்கள்? ஒருபோதும் இந்துயிசம் சீக்கியர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தாது.

ஆனால், இந்துத்துவா அதை செய்யும். எந்த இதிகாச, புராண புத்தகங்கள் இதுபோன்ற தாக்குதலை நடத்தலாம் என கூறியிருக்கிறது? பல உபநிஷங்களை நான் படித்துள்ளேன். அதிலும் அப்படி எதுவும் கூறப்படவில்லை. இந்துவுக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அதை பல நூறு பேர்களிடம் பரப்பி வேறுபாட்டை விளக்க வேண்டும். இன்று நம் நாட்டில், சித்தாந்த மோதல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரசின் சித்தாந்தம், பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் பின்பற்றப்பட்ட சித்தாந்தமாகும்.

காங்கிரசுக்கென சொந்த அடையாளம் உள்ளது. அது ஆர்எஸ்எஸ்.சுக்கு உள்ள அடையாளத்துக்கு நேர் எதிரானது. காங்கிரசின் சித்தாந்தத்தை சொந்த கட்சியிலும், நாடு முழுவதும் பரப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. நமக்கும் ஆர்எஸ்எஸ் நபருக்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு தொண்டர்கள் புரிய வைக்க வேண்டும். இதற்காக கட்சியினருக்கு பயிற்சிகள் தரப்பட வேண்டும்.
காங்கிரசின் சித்தாந்தம் ஒரு அழகிய ஆபரணம், முடிவில்லா சக்தி வாய்ந்தது. அதுவே நம் பலம். அதை நாம் கண்டறிய வேண்டும்.

நம் சித்தாந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும். அப்படி செய்தால், பாஜ.வின் சித்தாந்தத்தை மூடி மறைத்து விடலாம். வெறுப்புகளை பரப்புவதை நிறுத்திவிடலாம். நிலையற்றதாக உள்ள எதிர்காலத்தை நிலையாக்கி விடலாம். இவ்வாறு ராகுல் பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு அரசியலில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்கள் மகான்கள் அல்ல
காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் அல்வி விடுத்த அறிக்கையில், ‘ஜெய் ஸ்ரீராம் என முழங்கச் சொல்லி, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்கள் எல்லாம் ஒன்றும் முனிவர்கள், மகான்கள் அல்ல. ராமாயணத்தில் கொடூரனாக காட்டப்படும் ராவணன் கூட முனிவர் வேடத்தில்தான் வருவார்,’’ என்றார். இதற்கு பாஜ தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டர் பதிவில், ‘சல்மான் குர்ஷித், ராகுலை தொடர்ந்து ரஷித் ஆல்வி இப்போது ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்களை கொடூரர்கள் என்கிறார். ராம பக்தர்களை காங்கிரஸ் அவமதித்து விட்டது,’’ என்றார்.

குர்ஷித் புத்தகத்துக்கு தடை?
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதியுள்ள ‘சன்ரைஸ் ஓவர் அயோத்யா’ என்ற புத்தகம் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், இந்துத்துவத்தை ஐஎஸ், தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்கறிஞர்கள் டெல்லி போலீசில் புகார்கள் அளித்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று, மத்திய பிரதேசத்தில் இப்புத்தக விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இவரைப் போன்றவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்துக்களை சாதி அடிப்படையில் பிரிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்,’’ என்றார்.

Tags : Rahul Gandhi ,Hindu ,Congress , Rahul Gandhi Action Speech; Hinduism and Hindutva are different: the BJP is obsessed with covering up the Congress ideology
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...