நாட்டின் சுதந்திரம் பிச்சையா?... கங்கனாவின் பத்மஸ்ரீயை பறிக்க கட்சிகள் கோரிக்கை

புதுடெல்லி: சுதந்திரம் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத், ``பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. இந்தியாவுக்கு 2014ல் மோடி பிரதமரான பின்பு தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சைதான்,’ என்று பேசினார். இதற்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `கங்கனா ரனாவத்தின் கருத்து வெட்கக்கேடானது, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேலை அவமதித்துள்ளார். மேலும், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்தி உள்ளார். இது அவர் இழைத்த தேசத் துரோகம். அவருக்கு வழங்கிய பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இதேபோல், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் போன்றவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: