×

வாலாஜாபாத் -அவளூர் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு

* கிராம மக்கள் செல்ல தடை 

* மேம்பாலமாக உயர்த்தி கட்ட வலியுறுத்தல்


வாலாஜாபாத்: வாலாஜாபாத் -அவளூர் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்தி கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் பாலாற்று படுகையின் மைய பகுதியில் அமைந்துள்ளது வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலம் இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் அங்கம்பாக்கம், ஆசூர், கண்ணடியன்குடிசை, தம்மனூர், வள்ளிமேடு, காவாந்தண்டலம், இளையனார்வேலூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள் தோறும் இந்த தரை பாலத்தின் வழியாகத்தான் வாலாஜாபாத் வந்து செல்கின்றனர். 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், ஒரகடம், சுங்குவார்சத்திரம், பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு   அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனர். இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தில் உள்ள வங்கி, மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்களும் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாலாஜாபாத் பாலாற்று படுகையில் நாளுக்குநாள் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் தரை பாலத்தின் மேலே மழைநீர் சென்றதால் இருபுறமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாலாஜாபாத் மற்றும் மாகறல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதனால் இங்கு உளள கிராம மக்கள் வாலாஜாபாத் வரவேண்டுமென்றால் 20 கிலோமீட்டர் சுற்றி காஞ்சிபுரம் சென்றுதான் வாலாஜாபாத் வர வேண்டும். இதனால் பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள்  அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்பகுதியில் ஆண்டுதோறும் நிலவும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.  



Tags : Walajabad ,Avalur , Walajabad-Avalur ground bridge flooded
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...