×

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னிரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் என கடந்த ஜூன் 6ம் தேதி ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல்தலைமுறை பட்டதாரிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த செப்.3ம் தேதி நடைபெற்ற மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது நிதி, மனித வள மேலாண்மை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்யும் வகையில் ஆணையிடப்படுகிறது.

 அரசுப் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் பணியாளர் தெரிவுகளில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பதிவுதாரர்களின் பட்டியலை பெறுவதுடன் தினசரி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்றும் மேற்கொள்ளப்படும் நடைமுறையில் இடஒதுக்கீடு விதிகளுக்குட்பட்டு இந்த முன்னுரிமை அளிக்கப்படும் முறை, பின்பற்றப்பட வேண்டும். அத்தகைய பணியாளர் தெரிவுகளில், முன்னுரிமை பெற்றோர் மற்றும் முன்னுரிமையற்றோருக்கு இடையே 1: 4 என்கிற விகிதாச்சாரம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். முன்னுரிமை சுழற்சிகளின்படி மேற்கொள்ளப்பட்ட நேரடி நியமனங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு தொடர்புடைய நியமன அலுவலர்களால் பராமரிக்கப்பட வேண்டும்.

 முன்னுரிமை பிரிவு ஒவ்வொன்றினையும், அவற்றின் வரிசை எண்களை அடிப்படையாக கொண்ட சுழற்சி முறையினை பின்பற்றி முன்னுரிமைக்குரிய பணியிடத்திற்கு பரிசீலிக்கப்பட வேண்டும். முன்னுரிமை சுழற்சி பதிவேட்டின் அடிப்படையில் ஒரு தெரிவில் எந்த முன்னுரிமை வரிசை எண்ணில் பணி நியமனம் முடிவடைகிறதோ. அதற்கு அடுத்த முன்னுரிமை வரிசை எண்ணிலிருந்து அடுத்த தெரிவில் முன்னுரிமை தொடங்கப்பட வேண்டும்.  மேற்காணும் ஆணைகளை பின்பற்றி முன்னுரிமை பெற்றோர் மற்றும் முன்னுரிமையற்றோருக்கான பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, இன சுழற்சி விதிகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். மேலும் வேலைவாய்ப்பகங்களிலிருந்து பட்டியலை பெறுவதுடன், தினசரி விண்ணப்பம் பெற்று மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இவ்வாணை பொருந்தும்.

Tags : Corona infection, Tamil language student, government service, priority, government
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...