×

தர்மபுரியில் அதிகாலையில் பயங்கரம் ரயில் மீது விழுந்த ராட்சத பாறைகள் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: டிரைவரின் சாமர்த்தியத்தால் 2,348 பயணிகள் உயிர் தப்பினர்

தர்மபுரி: தர்மபுரி அருகே அதிகாலை நேரத்தில் ரயில் பாதையில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததால், அவ்வழியே சென்ற கண்ணூர்-பெங்களூரு சிறப்பு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டது. பாறைகள் உருண்டு வந்து ரயில் மீது விழவும் டிரைவர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் 2,348 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.  கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு யஷ்வந்த்பூருக்கு தினசரி சிறப்பு விரைவு ரயில் (07390) இயக்கப்பட்டு வருகிறது. கண்ணூரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சேலம் வந்தது. பின்னர், தர்மபுரி நோக்கி புறப்பட்டுச் சென்றது. அதிகாலை 3.50 மணிக்கு தொப்பூர்-சிவாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் முத்தம்பட்டி வனப்பகுதி வழியாகச் சென்றது.

அப்போது, மழையின் காரணமாக திடீரென ரயில் பாதையை ஒட்டிய மேட்டுப் பகுதியில் மண் சரிந்து, அங்கிருந்த ராட்சத பாறைகள் உருண்டு வந்தன. அந்த பாறைகள் அடுத்தடுத்து, ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது. பயங்கர சத்தத்துடன் ரயிலின் மீது பாறைகள் விழுந்ததில், பெட்டிகள் தடம் புரண்டன. இதனால், லோகோ பைலட்(டிரைவர்) இ.கே.ராஜீவ், உதவி லோகோ பைலட் நீரஜ்குமார் ஆகியோர் சாதுர்யமாக செயல்பட்டு, ரயிலை உடனடியாக நிறுத்தினர். உடனடியாக ரயிலுக்குள் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு, கீழே இறங்கினர். அதிகாலை வேளை என்பதாலும், காட்டுப்பகுதி என்பதாலும் கடும் கும்மிருட்டாக இருந்தது. இதனால், எந்த இடத்தில் இறங்கியிருக்கிறோம் எனத்தெரியாமல், பயணிகள் தவித்தனர். மறுபக்கம் வந்து பார்த்தபோது, ரயிலின் மீது அடுக்கடுக்காக பாறாங்கற்கள் வந்து விழுந்து கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

எப்படியோ உயிர் தப்பிவிட்டோம் என பெருமூச்சு விட்டனர். இந்த விபத்தில், 3 அடுக்கு ஏசி பெட்டிகளான பி1, பி2, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளான எஸ்-6, எஸ்-7, எஸ்-8, எஸ்-9, எஸ்-10 ஆகிய 7 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டு நின்றது. அந்த பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. இன்னும் சற்று வேகமாக ரயில் சென்றிருந்தால், அந்த பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்து பெரும் உயிர்ச்சேதத்துடன் கூடிய பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்திய காரணத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் இருந்த 2,348 பயணிகளும் உயிர் தப்பினர்.இவ்விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பெங்களூரு மற்றும் சேலத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளை துவங்கினர்.

மீட்புக்குழுவினர், முதலில் ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் பெங்களூருக்கு சென்றனர். அந்த ரயிலின் முதல் 3 பெட்டிகள் மீட்கப்பட்டது. அந்த பெட்டிகளில் இருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரிக்கு ரயில் சென்றது. அங்கிருந்து யஸ்வந்த்பூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல், பின்பகுதியில் சேதமின்றி இருந்த 10 ெபட்டிகளை மீட்டு மற்றொரு இன்ஜின் மூலம் சேலம் கொண்டு வந்து, திருப்பத்தூர் வழியே யஸ்வந்த்பூருக்கு அனுப்பி வைத்தனர். தடம் புரண்டு நின்ற 7 பெட்டிகளையும் மீட்கும் பணியில் பெங்களூரு, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். பிற்பகலில் அந்த 7 பெட்டிகளும் மீட்கப்பட்டு, சேலத்திற்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்த இடத்தில் சீரமைப்பு பணியை 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் செய்து வருகின்றனர். அந்த பணி நேற்றிரவு வரை நீடித்தது. அதிகாலை வேளையில் நடந்த இவ்விபத்து சேலம், தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாற்றுப்பாதையில் 6 ரயில்கள் இயக்கம்
கண்ணூர்- யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில், தர்மபுரி அருகே தடம் புரண்டு விபத்தில் சிக்கிய இடம் ஒற்றை வழித்தடமாகும். அதனால், அவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியே செல்ல வேண்டிய 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ஒரு ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டது.


Tags : Grotto , Dharmapuri, early morning, train, giant rocks, accident
× RELATED தர்மபுரியில் இன்று அதிகாலை பயங்கரம்.!...