×

மழையால் ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்ய 24 மணி நேரமும் இயங்கும் அலுவலர், களப்பணியாளர் குழு: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி


சென்னை: சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை  அலுவலகத்தில், தற்போது தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன் நேற்று காணொலி வாயிலாக  ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் எஸ்.சண்முகம், இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  1,32,000 மின்கம்பங்கள், 16,500 கி.மீ. மின்கம்பிகள், 7,000 மின்மாற்றிகள் மற்றும் 1,071 மின்மாற்றி கட்டமைப்புகள், வி.கிராஸ் ஆரம் 1,00,000, எர்த் பைப் 6,000, குறைந்த அழுத்த கிராஸ் ஆரம் 75,000, உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த இன்சுலேட்டர் 8,00,000, இழுவை கம்பி 48,000, பில்லர் பெட்டிகள் 1,270, உயரழுத்த புதைவடம் 65 கி.மீ., தாழ்வழுத்த புதைவடம் 1,000 கி.மீட்டர்கள்  கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 4,000 பொறியாளர்கள் மற்றும் 36,000 மின் ஊழியர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.   ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் செயற்பொறியாளர் தலைமையில் 24 நேரமும் மழைக்காலத்தில் காண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவனித்து வருகின்றனர்.

துணை மின் நிலையங்களுக்கு வரும் மின்பாதையில் ஏற்படும் மின்தடையை சரிசெய்யவும், மின்பாதையை ஆய்வு செய்வதற்கும் சிறப்பு குழுக்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதனால் பொதுமக்களுக்கு மின்தடை ஏற்படா வண்ணம் உள்ளது. ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு 24 நேரமும் பணியில் ஈடுபட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு மழைக் காலத்தில் காண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவனித்து வருகின்றனர்.  களப் பணியாளர்களை பொறுத்தவரை,  அதிகமான மழை பொழியும் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 12,100 பணியாளர்கள் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். (சென்னை மற்றும் புறநகர் - 4,000, திருவள்ளுர், காஞ்சிபுரம் - 1,350, கடலூர் - 1,800, நாகப்பட்டினம், மயிலாடுதுறை - 926, தஞ்சாவூர் - 1,568, திருவாரூர் - 435, செங்கல்பட்டு - 2,043). பருவமழைக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மின்விநியோகம் பெருமளவு பாதிக்கப்படாவண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  உள்ள 1,757 பீடர்களில் 71 பீடர்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 44.20 லட்சம் மின் நுகர்வோர்களில் 61,700 (1.3 சதவீதம்) மின் நுகர்வோர்களுக்கு தற்சமயம் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்கவும், மின்கட்டமைப்பில் ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்யவும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் எவ்வித தடங்கலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.


Tags : Kalappaniya Committee ,Minister ,Sentlephology , Rain, Officer, Fieldwork Committee, Minister Senthilpalaji
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...