×

மாமண்டூர் ஏரி 6 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

செய்யாறு: மாமண்டூர் ஏரி 6 வருடங்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் அமைந்துள்ள மாமண்டூர் ஏரி, மாவட்டத்திலேயே பெரிய ஏரியாகும். செய்யாறு மற்றும் பாலாற்றுப் படுகையிலிருந்து ராஜா கால்வாய், வடஇலுப்பை கால்வாய்,  தண்டரை அணைக்கட்டு கால்வாய் என 3 நீர்வரத்து கால்வாய்கள் வழியாக ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மாமண்டூர் ஏரி கி.பி.6-ம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இயற்கையாக அமையப்பட்ட இரண்டு குன்றுகளுக்கிடையே கரை கட்டப்பட்டு மொத்தம் 13.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள மாமண்டூர் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,798 மில்லியன் கன அடியாகும். தற்பொழுது ஏரிக்கு சுமார் 492 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 30.2 அடி நீர்மட்ட உயரம் கொண்ட ஏரியில் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  இந்த ஏரியில் நீர் பாசனத்திற்காக 4 மதகுகள் அமைக்கப்பட்டுள்ள தூசி மேட்டு மதகு மற்றும் பள்ள மதகு மூலம் 1,650 ஏக்கர் பாசன வசதியும், மாமண்டூர் மேட்டு மதகின் மூலம் 1,401  ஏக்கரும், பள்ள மதகின் மூலம் 1,067 ஏக்கரும் என 4,118 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

மாமண்டூர்  ஏரியால் தூசி, குரங்குணில்முட்டம், பல்லாவரம், கனிகிலுப்பை, மாமண்டூர், வடகல்பாக்கம், வாழவந்தல், திரிஞ்சாபுரம், மேனல்லூர், பூனைத்தாங்கல், சோதியம்பாக்கம், பகவந்தபுரம், ஏழாச்சேரி உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையாலும் செய்யாறு தாலுகாவில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 215 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 190 ஏரிகள் என மொத்தம் 405 ஏரிகளில் சுமார் 40 சதவிகித ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மற்றவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Mamantur Lake , Mamandur Lake fills up after 6 years: Farmers happy
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...