×

விழுப்புரம் அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் கோரை ஆற்றின் தற்காலிக தரைப்பாலம் உடைந்தது!: தனித்தீவாக மாறிய 4 கிராமங்கள்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 4 கிராமங்கள் தீவு போல காட்சியளிக்கின்றன. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டும் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக மரக்காணத்தில் 6 செ.மீ. மழையும், விழுப்புரத்தில் 4 செ.மீ. மழையும், வானூர் மற்றும் திண்டிவனத்தில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய கோரை ஆற்றின் தற்காலிக தரைப்பாலம் கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்டு 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் இடையேயான பாலம் தான் கோரை ஆற்றின் பாலம். இந்த தரைப்பாலத்தை கடந்து தான் மாரங்கியூர், பையூர், சேத்தூர், கொங்கரையாநல்லூர் ஆகிய 4 ஊர்களுக்கு செல்ல முடியும். தற்போது தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் அத்தியாவசிய பணிகளுக்காக 20 கி.மீ. சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். உடனடியாக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இத்தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் வருவாய்துறையினர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது.


Tags : Korai river ,Villupuram , Villupuram, heavy rain, Korai river, ground bridge
× RELATED விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ்...