×

முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற ஆணைப்படியே நீர் திறப்பு!: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மரங்களை வெட்டுவது தொடர்பான உத்தரவு தெரியாது என கேரள உள்துறை அமைச்சர் கூறுவது விநோதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே, முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 138 அடியாக இருக்க வேண்டிய நீர்மட்டம், 138.75 அடியாக உயர்ந்ததால் தான் தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

தண்ணீர் திறக்கப்பட்ட போது கேரள அமைச்சர்கள் தற்செயலாக அங்கு வந்திருந்ததையும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார். மேலும் முல்லை பெரியாறு அணையில் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரிகளே அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். கேரள வனத்துறை அதிகாரியே அனுமதி அளித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். வனத்துறை அமைச்சருக்கு தெரியாமல் கேரள அரசின் அதிகாரிகள் இரு மாநில விவகாரத்தில் ஒரு கடிதம் அனுப்ப முடியுமா? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். வனத்துறை அதிகாரிகளின் கடிதம் தொடர்பாக அமைச்சருக்கு எதுவும் தெரியாது என்பது விநோதமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சராக இருந்த போது முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டதற்கான குறிப்புகள், பொதுப்பணித்துறை ஆவணங்களில் இல்லை என்றும் துரைமுருகன் கூறினார். எனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செய்து விளம்பரம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மழை, வெள்ள பாதிப்பு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.


Tags : Mulla Periyaru Dam ,Supreme Court ,Minister ,Duraimurugan , Mullaperiyaru Dam, Water Opening, Thuraimurugan
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...