×

வாய்க்கால் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் புகுந்தது மழைநீர்-குஜிலியம்பாறை மக்கள் சிரமம்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளில் புகுந்துவிடுகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பரிதவிக்கின்றனர். பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குஜிலியம்பாறையில் 11, 12, 13 ஆகிய மூன்று வார்டுகள் உள்ளன. இதில் 1240 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைநீர் முறையாக செல்வதற்கு வடிகால் வசதி இதுவரை இல்லை. இதேபோல் குஜிலியம்பாறை மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் வெளியேறுவதற்கும் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் மழை பெய்யும் நாட்களில் குஜிலியம்பாறை கோட்டை மேட்டு சாலை, காளியம்மன் கோவில் சாலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் மழைநீர் முழுவதும், குஜிலியம்பாறை மயானச் சாலையின் பக்கவாட்டில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் குஜிலியம்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக, மழைநீர் தேங்கி முழுவதும் வெளியேற முடியவில்லை. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. தொடர் மழை காரணமாக மழைநீர் வரத்து அதிகமாகி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு வெளியே கழிப்பறைகள் உள்ளதால், இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் விஷஜந்துக்கள் படையெடுப்பு அதிகமாகி உள்ளதால் மக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், ‘‘குஜிலியம்பாறையில் வீடுகளில் புகும் மழைநீரை தடுக்க சாக்கடை வசதி ஒன்றே முழு தீர்வாகும். குஜிலியம்பாறை காளியம்மன் கோவில் சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைநீரை, மணப்பாறை சாலை வழியே கொண்டு வந்து, அங்குள்ள மெயின்ரோடு சந்திப்பில் பாலம் அமைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள சாலையில் செல்லும் வறட்டாற்று ஓடை வழியே கடத்த வேண்டும்.

அதேபோல் குஜிலியம்பாறை மயானச்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ள சாலையில் பாலம் அமைத்து, அச்சாலை வழியே செல்லும் வறட்டாற்று ஓடையில் மழை நீரை கடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குஜிலியம்பாறையில் மழைநீர் எங்கும் தேங்காமலும், குடியிருப்புகளில் புகாமலும் தடுக்க முடியும். இத்திட்டம் நிறைவேற நெடுஞ்சாலைத்துறை ஒப்புதலும் பெற வேண்டியுள்ளதால், பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தால் மட்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. எனவே பாளையம் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து குஜிலியம்பாறையில் வடிகால் வாய்க்கால் வசதி செய்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kujiliampara , Kujiliampara: Due to the lack of drainage facilities in Kujiliampara, rainwater seeps into the flats.
× RELATED குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்