நெமிலி அருகே கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் சீரமைப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி

நெமிலி : நெமிலி அருகே கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு மழை பெய்து  வருவதால் அனைத்து ஆறுகள், ஏரிகள் கால்வாய்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், நெமிலி  அருகே கொசஸ்தலை ஆற்றில் இருந்து பரமேஸ்வர மங்கலம், ஆட்டுப்பாக்கம், சித்தேரி ஆகிய  ஏரிக்கு செல்லக்கூடிய கொசஸ்தலை ஆற்றில் உள்ள  கால்வாய் உடைப்பு ஏற்பட்டு 500க்கும்  மேற்பட்ட ஏக்கருக்கு நீர் செல்ல வழி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்திருந்தனர்.

 இதுதொடர்பாக நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலுவிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து ஒன்றிய குழு தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நெமிலி அருகே உள்ள   கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது நெமிலி கொசஸ்தலை ஆற்றில் இருந்து பரமேஸ்வர மங்கலம், ஆட்டுப்பாக்கம், சித்தேரி ஆகிய  ஏரிக்கு செல்லக்கூடிய 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் உடைந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக இதனை சீரமைக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில் செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் கண்ணன், பணி ஆய்வாளர் கோபி ஆகியோர் தலைமையில்  தயார் நிலையில் வைத்திருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மண் மூட்டைகளை கொண்டு  வந்து கொசஸ்தலை ஆற்றில் உடைந்த கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: