×

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 09.11.2021 வரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 248.3 மி.மீட்டரை விட 46 சதவீதம் கூடுதல் ஆகும்.

குறிப்பாக செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 16 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:

* மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அணையிலிருந்து 20,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
* பவானிசாகர் அணையிலிருந்து, 10,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
* வைகை அணையிலிருந்து, 569 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை  நீர்த்தேக்கத்தின் பெயர் நீர் இருப்பு (மி.க.அ.)    வெளியேற்றப்படும் உபரி நீர்    
* பூண்டி- 2712/3231-4054 கனஅடி    
* சோழவரம் - 866/1081 - 1200 கனஅடி    
* செங்குன்றம் (புழல்) - 2841/3300 - 2145 கனஅடி    
* செம்பரம்பாக்கம்     - 2852/3645 - 2104 கனஅடி    

மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் நிவாரண முகாம்கள்:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், 2649 நபர்கள் 75 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு-

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 176 குடும்பங்களைச் சார்ந்த 800 நபர்கள் 21 நிவாரண முகாம்களிலும்,
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 204 குடும்பங்களைச் சார்ந்த 685 நபர்கள் 23 நிவாரண முகாம்களிலும்,
* பெரம்பலூர் மாவட்டத்தில், 26 குடும்பங்களைச் சார்ந்த 84 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
* இராணிப்பேட்டை மாவட்டத்தில், 11 குடும்பங்களைச் சார்ந்த 33 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
* திருவண்ணாமலை மாவட்டத்தில், 44 குடும்பங்களைச் சார்ந்த 213 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும்,
* விழுப்புரம் மாவட்டத்தில் 306 குடும்பங்களைச் சார்ந்த 903 நபர்கள் 21 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தேனி, திருச்சிராப்பள்ளி, மதுரை, சென்னை மாவட்டங்களில் 5 நபர்கள் உயிரிழந்துள்னர். மேலும், 64 கால்நடைகள் இறந்துள்ளன. 504 குடிசைகள் பகுதியாகவும், 34 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 538 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 125 வீடுகள் பகுதியாகவும், 4 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 129 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மீட்பு, நிவாரண நடவடிக்கைகள்:

கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையில் 8.11.2021 அன்று, இந்திய விமானப் படை, இந்திய கப்பல் படை, இந்திய கடலோர காவல் படை, இந்திய இராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அலுவலர்களுடன் அவசர காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலும், இந்திய கடலோர காவல் படையின் 5 டோனியர் விமானங்களும், 2 ஹெலிகாப்டர்களும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனைத்து விதமான தேடல், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த, வடக்கு வட்டாரத்திற்கு டாக்டர் டி. கார்த்திகேயன், இ.ஆ.ப., மத்திய வட்டாரத்திற்கு திரு. பங்கஜ் குமார் பன்சால், இ.ஆ.ப., மற்றும் தெற்கு வட்டாரத்திற்கு டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., ஆகிய மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திருமதி. அமுதா, இ.ஆப., நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 12 மூத்த  இந்திய காவல் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் உள்வட்டம், பர்கூர் செல்லும் மலைப்பாதையில் செட்டிநொடி நெய்க்கரை என்ற இடத்தில் 8.11.2021 அன்று மலையிலிருந்து பெரிய பாறை சரிந்து சாலையில் விழுந்தது.  வருவாய்த் துறை, காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சாலையின் வீழ்ந்த பாறையினை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் தடுப்பு சுவர் சேதமுற்றது. இதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சியில் வாலாஜா கூட்டுசாலை மற்றும் ஆற்காடு வட்டம், புதுப்பாடி உள்வட்டம், மேச்சேரி கிராமம் முதல் அரும்பாக்கம் கிராமம் செல்லும் சாலையில் வீழ்ந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. நெமிலி வட்டம், சயனபுரம் கிராமத்திலுள்ள சித்தேரியின் கரையில் மண்சரிவு ஏற்பட்டு இருந்ததைத் தொடர்ந்து பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கரை உடனடியாக சீரமைக்கப்பட்டது.

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் படகு சென்ற படகுகளுள், 45 படகுகள் தவிர அனைத்து படகுகளும் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன.  இந்த 45 படகுகளில் உள்ள 250 மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 23 படகுகள் ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினத்திற்கும், 22 படகுகள் தமிழ்நாட்டிற்கும் இன்று இரவிற்குள் பத்திரமாக கரை சேரும்.

பெருநகர சென்னை மாநகராட்சி:

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, 16 நிவாரண முகாம்களில், 1,343 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 9,12,370 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கியுள்ள 363 பகுதிகளுள், 140 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள்  மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 223 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.  

மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 14 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 2 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 100 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. 205 மருத்துவ முகாம்கள் மூலம் 8546 நபர்கள் பயனடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 43 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 யிசிஙி-களும், 325 இராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 15 மண்டலங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பு:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 8.11.2021 நாளிட்ட அறிவிக்கை எண் 5-இல், தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச கடலோரத்தின் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், சுமத்திரா கடற்கரையின் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 9.11.2021 அன்று உருவாகும் என்றும், இது வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும்,  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 9.11.2021 முதல் 12.11.2021 வரை வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் ஜிழிஷிவிகிஸிஜி இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Bangladesh ,Minister ,Ramachandran , Bay of Bengal, Depression, Precautions, Minister Ramachandran
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...