×

பங்களாதேஷ் நாட்டில் இருந்து அதிகளவில் துணிகள் இறக்குமதி: திருப்பூர் ஜவுளி ராஜ்யத்தை அழித்த மோடி

இந்தியாவில் விவசாய தொழிலுக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகின்றது. ஜவுளி உற்பத்தி தொழிலில் முக்கிய பங்காற்றி வருவது பவர்லூம் எனப்படும் விசைத்தறி தொழில்தான். நாடு முழுவதும் 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழில் மூலம் பல கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே விசைத்தறித்தொழிலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 40 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில், 90 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று தங்கள் குடும்பத்தினரை காத்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 4 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு பெரும்பாலும் காடா துணி எனப்படும் காட்டன் மற்றும் ரயான் பஞ்சினை கொண்டு துணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை, தென்காசி, அருப்புக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆரணி, குடியாத்தம், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் மதிப்பு கூட்டப்பட்ட துணிகளான சேலை, லுங்கி, வேஷ்டி போன்ற ரகங்கள் உற்பத்தி செய்து வருகிறார்கள். மனிதர்களின் மானம் காக்கும் விசைத்தறி தொழிலானது கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியின் தவறான கொள்கை முடிவுகளால் இன்று அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:
2016ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் 2017ல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி போன்றவற்றால் நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சிறிது சிறிதாக பாதிக்கபட தொடங்கினர். 2020-21ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கிட்டத்தட்ட 6 மாத காலம் தொழில் முடக்கப்பட்டு பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தொழிலை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் பெரும் முதலீடு செய்து வியாபாரம் செய்யும் உற்பத்தியாளர்களுக்கும் அல்லது தங்கள் சொத்து மூலம் அடமானக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே ஒன்றிய அரசு கடன்களை திரும்ப செலுத்த காலக்கெடு அல்லது தள்ளுபடி போன்றவைகளை வழங்கியது. ஆனால் சிறு, குறு நெசவாளர்கள் யாருக்கும் அரசு எவ்வித நிவாரணமோ அல்லது மூலதன கடனோ கொடுக்க முன்வரவில்லை. ரஷ்யா, உக்ரைன் போரின் மூலம் உலக பொருளாதார வீழ்ச்சி அடைந்த சூழ்நிலையில் முதலில் பாதிக்கப்பட்டது ஜவுளி துறைதான்.

அதன் பாதிப்பால் பெரும்பாலான விசைத்தறி நெசவாளர்கள் தங்கள் தொழிலை விட்டும், விசைத்தறிகளை விற்று மாற்றுத் தொழிலுக்கும் சென்று விட்டார்கள். கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் தேய்பிறையாக மாறி தற்போது ஜவுளி தொழில் என்பது முழு அமாவாசையாக இருந்து வருகிறது. ஜவுளித்தொழில் வரலாற்றின் இருண்ட காலம் என்பது மோடி ஆட்சியின் 10 ஆண்டுகளை கூற முடியும். ஒன்றிய அரசை பொருத்தவரை ஹைடெக் இயந்திரங்கள் மூலம் ஜவுளி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணி, அதனை வளர்ச்சி அடையும் பொருட்டு புதிய மற்றும் பழைய தானியங்கி கருவிகளை வாங்க ஊக்குவித்து அதன் மூலம் அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு பெரும் உற்பத்தியை உலகத்தரத்துக்கு ஏற்ப கொண்டு வர செய்ததின் பயனாக 100 மீட்டர் தேவைப்படும் இடத்தில் 1000 மீட்டர் துணிகளை உற்பத்தி செய்து துணியின் விலைகளை குறைக்க வழிவகை ஏற்பட்டது.

இந்த திட்டம் மூலம் ஜவுளித்துறையினர் யாரும் முதலீடு செய்ய முடியவில்லை. ஆனால், மாற்றுத் தொழிலில் உள்ளவர்கள் தங்களுடைய வரிப்பணத்தில் கழித்துக் கொள்வதற்காகவே அரசு கொடுத்த மானியத்தை பெற்று தொழில் ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல், பெரும் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பிஎல்ஐ என்னும் திட்டம் மூலம் ₹150 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு 50 சதவீதம் மானியம் என்று அறிவித்த காரணத்தால் அவர்கள் தங்களுடைய துணிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும்போது, விசைத்தறியாளர்கள் எவ்வித மானியத்தையும் பெறாத சூழ்நிலையில் அவர்களுடன் போட்டி போட்டு குறைந்த விலைக்கு துணியை விற்று வந்த காரணத்தால் பெரும்பாலான விசைத்தறியாளர்கள் கொங்கு மண்டலத்தில் தொழிலை விட்டும் சென்றுவிட்டனர். ஒரு சிலர் தற்கொலையே செய்து கொண்டனர்.

அதேபோல 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வந்த சூழ்நிலையில் பெரும்பாலான செயற்கை இழை நூலில் உற்பத்தி செய்த நெசவாளர்களுக்கு ரீபண்ட் கிடைக்கவில்லை. 20 தறி கொண்ட நெசவாளர்கள் தங்களுடைய உற்பத்தி மூலதனமே 12 லட்சத்திற்கு இருக்கும். ஆனால், இந்த 13 மாத ஜிஎஸ்டி ரீபண்ட் மூலம் நெசவாளர்களுக்கு சுமார் ₹16 லட்சம் வரை தற்போது அரசிடம் இருந்து வர வேண்டி உள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இந்த ரீபண்ட் தொகை பெரும்பாலும் செயற்கை இலை நூல் மூலம் உற்பத்தி செய்த நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் 1000க்கும் மேற்பட்டவர்கள் தொழிலை விட்டு சென்று விட்டார்கள்.

இதுவரை பழைய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை வேண்டி தொடர்ச்சியாக 6 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பங்களாதேஷ் நாட்டில் இருந்து துணிகள் அதிகப்படியான வரத்து காரணத்தால் திருப்பூர் என்ற ஜவுளி ராஜ்யமே முடிவுக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விசைத்தறியாளர்களின் நலன்களை கவனிக்க தவற விட்டு விட்டது.

ஒன்றிய அரசு ஜெம் செயலி மூலம் ரயில்வே, ராணுவம் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகத்துக்கு உண்டான துணிகளை கொள்முதல் செய்து வருகிறது. அதனை நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ஒன்றிய அரசு சீருடைகள் மற்றும் துணி உபகரணங்களை விசைத்தறி நெசவாளர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டுகிறோம்.

ஆனால் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது. பி.எம். மித்ரா திட்டம் மூலம் விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட சூழ்நிலையில் அதற்குண்டான எவ்வித செயல்பாடும் நடைபெறவில்லை. ஒன்றிய அரசின் தவறான கொள்கை முடிவுகளாலும், புதிய பயனுள்ள திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத காரணத்தால் விசைத்தறி தொழில் இன்றைக்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பஞ்சு விலை கடும் உயர்வு
‘கடந்த 4 ஆண்டுகளாக பருத்தி நூல்கள் யூக மார்க்கெட் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால் கடுமையாக விலை ஏறி உள்ளது. பருத்தி மூலம் உற்பத்தி செய்ய முடியாத நெசவாளர்கள் அதற்கு மாற்றாக செயற்கை இலை நூல்களை விசைத்தறியாளர்கள் பயன்படுத்தும் விதமாக ஆவணம் செய்யப்பட்டது. மேக் இன் இந்தியா மூலம் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் தயார் செய்யப்பட வேண்டும் என்று எண்ணத்தில் செயல்பட்டு வந்த ஒன்றிய அரசு செயற்கை இலைகள் மூலப்பொருள்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா என்ற விதிக்கு மாறாக தனிநபர் நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. இதனால், நூலின் மூலப்பொருளான பஞ்சு விலையானது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்வு இருந்துள்ளது’ என்று விசைத்தறியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பவர் டேக்ஸ் இந்தியா திட்டத்தை நிறுத்திய ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு 1987ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது. 22 ரகங்கள் விசைத்தறியில் தயாரிக்க கூடாது என்ற நிலையில் பின்னர் 11 ரகங்களாக மாற்றி நடைமுறைப்படுத்தியது. இன்றைய கால சூழலில் கைத்தறிகள் பெரும்பாலும் இல்லாத காரணத்தால் 11 ரகத்திலிருந்து 5 ரகங்களுக்கு கீழ் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. விசைத்தறி நெசவாளர்களுக்கு உண்டான பவர் டேக்ஸ் இந்தியா என்ற திட்டம் 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்களுக்கு 80 ரூபாயில் இன்சூரன்ஸ், விசைத்தறிகளை மேம்படுத்த 50 சதவீத மானியமும், சோலார் பேனல் அமைக்க 50 சதவீத மானியம், நூல் வங்கி திட்டம் ஆரம்பிக்க 50 சதவீத மூலதன கடன் போன்ற திட்டங்கள் மூலம் நெசவாளர்கள் பயனடைந்து வந்த சூழ்நிலையில் திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு மேம்படுத்துவதாக கூறி தற்போது வரை நிறுத்தி வைத்துள்ளது.

விசைத்தறிகளுக்கு ₹160 கோடி ஜிஎஸ்டி ரிட்டன் பாக்கி
ரயான் மற்றும் பாலிஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் தமிழ்நாட்டில் 2 லட்சம் உள்ளது. இவர்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. சுமார் 20 தறிகள் வைத்துள்ள ஒரு விசைத்தறியாளருக்கு சுமார் ₹16 லட்சம் ஜிஎஸ்டி ரிட்டன் வர வேண்டி உள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் 2 லட்சம் விசைத்தறிகளுக்கு ₹160 கோடி ஜிஎஸ்டி ரிட்டன் தொகை வர வேண்டி உள்ளது என்று விசைத்தறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post பங்களாதேஷ் நாட்டில் இருந்து அதிகளவில் துணிகள் இறக்குமதி: திருப்பூர் ஜவுளி ராஜ்யத்தை அழித்த மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tirupur ,India ,Bangladesh ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி