குரூப் 4 தேர்வு முறைகேட்டில் 2 ஊழியர் உட்பட 115 பேர் கைது: ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி தகவல்

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேட்டில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஷ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 2019ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். சிபிஐ விசாரித்தால் தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிபிசிஐடி தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘2017ல் நடந்த குரூப் 2, 2019ல் நடந்த குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடந்த முறைகேடு மற்றும் மோசடி குறித்து சிபிசிஐடி தரப்பில் ஒருங்கிணைந்த விசாரணை நடந்தது. குரூப் 4 தேர்வில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதில்,  39 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றனர். இதில், 95 தேர்வர்கள், 2 டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் உள்ளிட்ட 115 பேர் கைது செய்யப்பட்டனர். விடைத்தாள்களை சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் முறைகேடு நடந்துள்ளது.

குரூப் 2 தேர்வில் 40 தேர்வர்கள், 3 போலீசார், 2 விஏஓ, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஒருவர் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர். 2016ல் நடந்த விஏஓ தேர்வில் 9 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்றனர். 8 தேர்வர், ஒரு போலீசார், உள்ளிட்ட 17 ேபர் கைது செய்யப்பட்டனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் மட்டுமே முறைகேடு நடந்தது. எஸ்பி தலைமையில் முறையாக விசாரணை நடக்கிறது. எனவே, சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை’’ என்றார்.

இதையடுத்து மனு மீதான விசாரணையை நாளைக்கு (நவ. 10) தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: