×

மழை வெள்ளத்தால் பாதித்தவர்களை மீட்டு பாதுகாக்க 150 இடங்களில் தற்காலிக முகாம்கள்

* பாதிப்புகளை தடுக்கவே மின்சாரம் துண்டிப்பு  
* கடல் மட்டம் உயர்வால் நீர் வடிவதில் தாமதம்
* அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதித்தவர்களை மீட்டு பாதுகாக்க மேலும் 150 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்ப்பதற்காக, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் மழைநீர் வடிவதில் தாமதம் ஆகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் கன மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவ மக்களுக்கு நிவாரண உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அப்போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை மிகப்பெரிய அளவில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மூன்று முறை சேவைத் துறை அலுவலர்களுடன் கூட்டங்கள் நடத்தி, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்திட வேண்டும். யார் யார் என்னென்ன பணிகளை கவனித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் ஆற்றிலிருந்து மழைநீர் சென்றாலும் கடல்மட்டம் உள்வாங்கினால் மட்டுமே மழைநீர் எளிதாக செல்லும். ஆனால் கடல்நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் மழைநீர் செல்வது என்பது ஓரிரு மணிநேரம் தாமதம் ஆகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ள நீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.

பல்வேறு குடிசைப் பகுதியில் 2 அடி அல்லது 3 அடி மழைநீர் மட்டம் உயர்ந்து வீடுகளில் 2 அடி அளவுக்கு நீர் புகுந்துள்ளது. குடிநீர், கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தாழ்வான பகுதியில் இருக்கிற குடியிருப்புவாசிகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம். பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்ப்பதற்காக தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக இருக்கிற இடத்திலிருந்து, பக்கத்தில் இருக்கிற இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அழைத்தால் தயங்காமல் சென்று தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, பேசின் பிரிட்ஜ், கோபாலபுரம் போன்ற இடங்களில் சமையல் கூடங்கள் இருக்கிறது. மேலும், ஒவ்வொரு மண்டலத்திலும் வருவாய் அலுவலர்கள் தலைமையில் உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதித்தவர்களை மீட்டு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக கூடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாப்பாக தங்க வைக்க மேலும் 150 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள், இரண்டு நாட்களுக்கு சென்னை திரும்பாமல் இருப்பது பாதுகாப்பானது. போக்குவரத்து நெரிசல், மழைநீரில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கலாம். இவ்வாறு கூறினார்.

Tags : Temporary camps at 150 places to rescue and protect flood victims
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...