புழல் ஏரி உபரிநீர் திறக்கப்பட்டதால் மணலி ஆமுல்லைவாயல் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்துக்கு தடை

திருவொற்றியூர்: சென்னை மற்றும் புறநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்ததால் வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பல இடங்களில் தாழ்வான பகுதி வீடுகள் மற்றும் சாலைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில்  தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு  பள்ளி, சமுதாய கூடங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் வழங்க மாநகராட்சி சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புழல் ஏரியில் இருந்து 2வது நாளான நேற்று 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால், மணலி ஆமுல்லைவாயல் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. எனவே, இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே மணலி சாலையிலிருந்து சடையங்குப்பத்திற்கு செல்லும் கால்வாய் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், அந்த வழியாகவும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டி மழைநீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் தாழ்வாக  உள்ள தெருக்கள் மேலும்  மழைநீர் சூழும் அபாயம் இருப்பதால் அவர்களை மீட்பதற்காக தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: