×

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் ஏன் திறக்கப்பட்டது? அமைச்சர் துரைமுருகன் மீண்டும் விளக்கம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் ஏன் திறக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் எனவும், கேரள மாநில அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா எனவும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்  மீண்டும் கேள்வி கேட்டுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த நீர்மட்ட அளவுகளின்படி அணையின் நீர்மட்டம் 10.10.2021 அன்று 138.50 அடியாகவும், 20.10.2021 அன்று 137.75 அடியாகவும், 31.10.2021 அன்று 138.00 அடியாகவும் இருக்க வேண்டும். 27.10.2021 மாலையில் இருந்து அணையின் நீர்மட்டம் அதிகரித்து 28.10.2021 காலை நீர்மட்டம் 138.05 அடியாகவும், 29.10.2021 அன்று நீர்மட்டம் 138.75 அடியாகவும் இருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நீர்மட்ட அளவுகளின்படி 138 அடியாக இருந்திருக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் எடுத்தபோதிலும் நீர்மட்டம் அதிகரித்தது.

எனவே, அதிகப்படியான நீர் அணையின் உபரிநீர் போக்கிகள் வழியாக தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட்ட பிறகுதான் தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாக இருந்தது. எனவே உபரிநீர் போக்கிகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் 28.10.2021 அணையில் வெளியிடப்பட்ட அறிவுரையின்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருக்கும் நீரானது திறந்துவிட வேண்டியதாயிற்று. அணையின் நீர்மட்டம் 30.11.2021 அன்று 142 அடியை எட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Mulla Periyar Dam ,Minister ,Duraimurugan , Why was water released from Mulla Periyar Dam? Minister Duraimurugan again explained
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...