×

விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன்: மேகாலயா ஆளுநர் தடாலடி அறிவிப்பு..!

ஷில்லாங்: விவசாயிகள் கேட்டுக் கொண்டால் நான் எனது ஆளுநர் பதவியை ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன் என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறினார். மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘விவசாயிகள் பிரச்னைகள் குறித்து ஏதாவது கூறினால், அது பெரிய அளவில் சர்ச்சையாகிவிடுகிறது. டெல்லியில் போராடும் மக்கள் கேட்டுக் கொண்டால் நான் எனது ஆளுநர் பதவியை ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன். என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க முடியாது. ஆனால் எனது நலன் விரும்பிகள் சிலர், நான் ஏதாவது கூறவேண்டும் என்று விரும்புகின்றனர். நாட்டில் இதுவரை நடந்த போராட்டங்களில் இன்று வரை 600 பேர் வீரமரணம் அடைந்த பெரிய அளவிலான போராட்டம் நடந்ததில்லை.

ஆனால், டெல்லியில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் இறந்தவர்களுக்காக இரங்கலைகூட தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில்கூட இரங்கல் தீர்மானம் முன்வைக்கப்படவில்லை’ என்றார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பேசிய சத்யபால் மாலிக், ‘விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஒன்றிய பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. பல கிராமங்களுக்குள் பாஜக தலைவர்கள் நுழைய முடியாது. நான் மீரட்டிலிருந்து வருகிறேன். எனது பகுதியில் உள்ள எந்த பாஜக தலைவரும், எந்த கிராமத்திலும் நுழைய முடியாது’ என்றார். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அவ்வப்போது ஆளுநர் மாலிக் கருத்துகளை தெரிவித்து வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Tags : Meghalaya Governor ,Thadaladi , I will resign in a minute if farmers ask: Meghalaya Governor Thadaladi announces ..!
× RELATED ஒன்றிய அரசின் ஜிஎஸ்டியால் அனைத்து...