குவாடலஜாரா: ஆண்டு தோறும் சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் வரும் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்த தொடர் நடைபெற உள்ளது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி விலகிய நிலையில், பெலாரசின் ஆர்யனா சபலெங்கா, செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா, கரோலினா பிளிஸ்கோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி, போலந்தின் இகா ஸ்விடெக், ஸ்பெயினின் முகுருசா, பவுலா படோசா, எஸ்டோனியாவின் அனெட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள துனிசியாவின் ஓன்ஸ் ஜாபூர் தொடரில் இருந்து விலகி உள்ளார். 27 வயதான அவர் முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் என்னால் குவாடலஜாராவுக்கு செல்ல முடியாது என்பதை அறிவிப்பதில் வருந்துகிறேன். குணமடைந்து அடுத்த சீசனுக்குத் தயாராவதற்கு எனக்கு அதிக நேரம் தேவை. எனது இலக்கை அடைவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உலகில் எனது சிறந்த தரவரிசை 7. உங்கள் ஆதரவிற்கு நன்றி, அடுத்த ஆண்டு சந்திப்போம், என டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.