இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மத அமைப்புகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயிலில் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம் கராக்கின் தெரி பகுதியில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில், சில மத அமைப்புகளால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேதப்படுத்தப்பட்டது. சுமார் 1000 பேர் திரண்டு, இந்து கோயிலை சேதப்படுத்தி, கடவுள் சிலையை உடைத்து தீ வைத்தனர். இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயிலை சேதப்படுத்திய 109 குற்றவாளிகளிடமிருந்து சுமார் ரூ.3 கோடி வசூல் செய்து, அதை வைத்து கோயிலை சீரமைக்க உத்தரவிட்டது. அதன்படி, கோயில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இக்கோயிலில் தீபாவளி பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாட பாகிஸ்தான் இந்து கவுன்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சர் அகமது சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், கோயிலை சேதப்படுத்தியவர்களின் எண்ணம் ஈடேறவில்லை என இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் குமார் வன்க்வானி கூறி உள்ளார். விழாவில் பங்கேற்க சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் தெரி பகுதிக்கு வந்துள்ளனர்.