×

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு 33 சதவீத பெற்றோர் மட்டுமே சம்மதம்! ஜிப்மர், பிஜிமர் நடத்திய ஆய்வில் தகவல்

புதுடெல்லி: குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு 33% பெற்றோர் மட்டுமே சம்மதம் தெரிவித்துள்ளதாக ஜிப்மர் மற்றும் பிஜிமர் நடத்திய ஆன்லைன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள பிஜிமர் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆன்லைன் ஆய்வு வெளியாகி உள்ளது. அதில், ‘கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் 33.5 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஒப்புக் கொண்டனர்.

இதற்கு அவர்கள் கூறும் காரணம், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் (86.4 சதவீதம்) மற்றும் பக்க விளைவுகள் (78.2 சதவீதம்) குறித்த தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர். அதனால், தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலகிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்விக்கு சிரமங்கள் ஏற்படும் என்பதால் சிலர் தங்களது குழந்தைக்கு தடுப்பூசி போட விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர். 12 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான டிஎன்ஏ தடுப்பூசியான ஜெயகோவ்-டி-யை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியானது உயர் மருந்து கட்டுப்பாட்டாளரால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் ரிதேஷ் சிங் கூறுகையில், ‘ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பெற்றோர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் மட்டுமே ஏற்படுகிறது. அதனால், இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளன. அதேநேரம் குழந்தைகளின் மரணத்தைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன’ என்று கூறினார்.

Tags : Zipmer ,Bjimar , Only 33% of parents agree to vaccinate children! Information from a study conducted by Zimmer, Fijimer
× RELATED வெளிமாநில நோயாளிகள் அவதி: ஜிப்மர்...