தீபாவளி பண்டிகை விடுமுறை நீட்டிப்பு எதிரொலி சென்னை செல்லும் தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்: காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டியது

நெல்லை: தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையால் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நாளை (7ம் தேதி) சென்னைக்கு செல்லும் எந்த ரயிலிலும் இடமில்லை. காத்திருப்போர் பட்டியல் அனைத்து ரயில்களிலும் 100ஐ தாண்டியுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு நாள் விடுமுறை என்று இருந்த நிலையில் 5ம் தேதியும் சேர்த்து தமிழக அரசு விடுமுறை அறிவித்தது.  இதனால் அரசு அலுவலகங்களுக்கும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்தது.

இந்நிலையில் பண்டிகை முடிந்து நாளை (7ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக நெல்லையில் இருந்து இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி காத்திருப்போர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 105 ஆக இருந்தது. மூன்று அடுக்கு குளிர்சாதன வசதியில் காத்திரப்போர் பட்டியல் 23 ஆக இருந்தது. குமரியில் இருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு காத்திருப்போர் பட்டியல் 98 ஆக உள்ளது.

மூன்று அடுக்கு ஏசி வசதிக்கு காத்திருப்போர் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பில் காத்திருப்போர் எண்ணிக்கை 142 ஆகவும், மூன்று அடுக்கு ஏசிக்கு 29 ஆகவும் இருந்தது. திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பிற்கு 56 பேரும், மூன்று அடுக்கு ஏசிக்கு 20 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பகல் நேரத்தில் சென்னைக்கு இயக்கப்படும் குருவாயூர் - சென்னை ரயிலிலும் காத்திருப்போர் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பிற்கு 142 பேரும், மூன்று அடுக்கு ஏசிக்கு 29 பேரும் இடத்திற்காக காத்திருக்கின்றனர். நெல்லையில் இருந்தும், நெல்லை வழியாகவும் 8 ரயில்கள் 7ம் தேதி சென்னைக்கு இயக்கப்படும் போதிலும், எந்த ரயிலிலும் இடமில்லை.

Related Stories: