×

ஒரே ஆண்டில் 4வது முறையாக அமராவதி அணை மீண்டும் நிரம்பியது

உடுமலை: ஒரே ஆண்டில் 4வது முறையாக அமராவதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர, கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது.வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான அளவு நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு மூன்று முறை அணை நிரம்பி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டு (2021) ஜனவரியில் காலநிலை மாற்றத்தால், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஜனவரி 13-ம் தேதி 9 கண் ஷட்டர் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. மேலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக அணையில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது.

இதைத்தொடர்ந்து, பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூலை 23ம் தேதி 2வது முறையாகவும், ஆகஸ்ட் 23ம் தேதி 3வது முறையாகவும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று காலை 2 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் நீர்மட்டம் 87.3 அடியாக உயர்ந்தது. மதியம் 884 கன அடி நீர் வந்தது. இதையடுத்து, அணையின் கீழ் ஷட்டர் வழியாக, ஆற்றில் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் 4வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால், அமராவதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Amarawati Dam , Amravati Dam
× RELATED உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில்...