ஓயாமல் கேட்ட வெடிச்சத்தம்!: தீபாவளி பட்டாசுகளால் சென்னையில் அபாய அளவை எட்டிய காற்று மாசு..புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி..!!

சென்னை: சென்னையில் பட்டாசு புகை காரணமாக காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வெடிச்சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அண்ணாநகர், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினம்பாக்கம், வடபழனி, திருவான்மியூர், கோட்டூர்புரம், கிண்டி சாலைகளில் எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது.

பட்டாசு புகை காரணமாக சென்னையில் காற்றின் தர குறியீடு அபாயகரமான அளவை எட்டியது. காற்றின் தரக்குறியீடு 100 வரை இருந்தால் மட்டுமே பாதுகாப்பானது என்ற நிலையில், பெரும்பாலான பகுதிகளில் 500க்கும் அதிகமாகவே இருந்தது. சென்னையில் உள்ள ஒவ்வொருவரும் 45 சிகரெட்டுகளை புகைத்த அளவிற்கு அதீத மாசு ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 ஆகவும், மணலியில் 578 ஆகவும் தர குறியீடு பதிவானது. இது இயல்பை விட 20 மடங்கு அதிகமாகும்.

இருப்பினும் இரவு பெய்த சாரல் மழையால் காலையில் புகைமூட்டம் குறைந்து காற்றில் நுண் துகள்களின் அளவு 160 ஆக குறைந்தது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல விதிகளை மீறி பட்டாசு விற்பனை செய்ததாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 517 பேர் கைது செய்யப்பட்டு காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: