×

கூடலூரில் வீட்டை இடித்து சூறையாடிய காட்டு யானைகள்: சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம்

கூடலூர்: கூடலூரில் 2 காட்டு யானைகள் வீட்டை இடித்து சூறையாடின. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். கூடலூரை சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் கிராம பகுதிக்குள் புகுந்து வீடுகளை இடித்தும், விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன. கடந்த 2 மாதத்திற்கு முன்பு தேவாலா பகுதிகளில் 2 யானைகள் வீடுகளை இடித்து உள்ளே இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தன. இதைக்கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அந்த யானைகள் கடந்த 4 நாட்களில் பாடந்தொரை பகுதியில் 5க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தின.  நேற்று பாடந்தொரை புழுக்கொல்லி பகுதியில் சாமி என்பவரது விவசாய நிலத்திற்குள் புகுந்த அந்த 2 யானைகள், அவரது வீட்டை இடித்து சூறையாடின. சாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது   சுற்றுச்சுவரை யானைகள் இடித்தன.

இதையறிந்த சாமி குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது சுவரில் இருந்து செங்கல் விழுந்ததில் சாமி, அவரது மனைவி, மகள் காயம் அடைந்தனர். தொடர்ந்து வீட்டை உடைத்த யானைகள் உள்ளே இருந்த உடைமைகளை தூக்கி வெளியே வீசின. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வருவதற்குள் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Güdalur , koodalur , elephants
× RELATED கூடலூரில் 3வது நாளாக தொடரும் சம்பவம்:...