×

கிரிவலப்பாதை அருகே சுகாதார சீர்கேடாக இருந்த நகராட்சி குப்பைக் கிடங்கு நகருக்கு வெளியே இடம் மாற்ற நடவடிக்கை: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு நடத்தினார்.திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசான்ய மயானம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்திருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில், ஆயிரக்கணக்கான டன் குப்பைக் கழிவுகள் மலைபோல குவிந்திருக்கிறது.மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக் கழிவுகளுடன் பல ஆண்டுகளாக குப்பை குவிந்திருப்பதால், அப்பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் குப்பை கழிவுகள் சகதியாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. வெயில் காலங்களில் சமூக விரோதிகள் குப்பைக் கிடங்குக்கு தீ வைப்பதால், நச்சுப்புகை வெளியேறி மக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த கோடை காலங்களில் தொடர்ந்து பல நாட்கள் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்த அவல நிலை இருந்தது. அதனால், அந்த பகுதியில் குடியிருப்போர் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும், கிரிவலப்பாதைக்கு அருகிலும், அஷ்டலிங்க சன்னதிகளில் நிறைவு சன்னதியான ஈசான்ய லிங்க சன்னதிக்கு அருகிலும் குப்பைக் கிடங்கு அமைந்திருப்பதால் கிரிவல பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை, நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்ைல. நாயுடுமங்கலம் அடுத்த அகரம் சிப்பந்தி பகுதிக்கு குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி நடந்தது.ஆனால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, குப்பைக் கிடங்குக்கு மாற்று இடம் தேர்வு செய்வதில் ெதாடர்ந்து சிக்கலும், குழப்பமும் நீடித்தது. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை, காஞ்சி சாலையில் புனல்காடு பகுதிக்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி, நகராட்சி குப்பைக் கிடங்கை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.குப்பை கிடங்கு அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, குவிந்துள்ள குப்பைகளை எவ்வாறு அகற்றுவது, அதற்கான கால அவகாசம், குவிந்துள்ள குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்ெதாடர்ந்து, காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு பகுதியில் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குப்பைக் கிடங்குக்கான மாற்று இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். அந்த பகுதியில் குப்பைகிடங்கு அமைப்பதால், பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.ஆய்வின்போது, கலெக்டர் பா.முருகேஷ், எம்பி சி.என்.அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், கார்த்திவேல்மாறன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, அருணை வெங்கட், பிரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.



Tags : Municipal Garbage Depot ,Kiriwalapathai ,Public Works ,Minister ,EV Vellu , Municipal Garbage Depot near Girivalapada which was a health disorder Measures to relocate outside the city: Public Works Minister EV Velu study
× RELATED கழிவுநீர், குப்பை, இறைச்சி கழிவு...