×

கழிவுநீர், குப்பை, இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் மாசடைந்து வரும் மாடம்பாக்கம் ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை


தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி ஒரு காலத்தில் 230 ஏக்கருக்கு மேல் இருந்ததாகவும் தற்போது, ஆக்கிரமிப்புகளால் 100 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏரியை சுற்றி சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஏரியிலிருந்து சிட்லபாக்கம் பகுதிக்கு 16 லட்சம் லிட்டர் தண்ணீரும், மாடம்பாக்கம் பகுதிக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீரும் என மொத்தம் சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், குடிநீர் ஆதாரமாகவும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு வீடுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த ஏரியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஏரியை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதுடன், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பை கழிவுகள் ஏரி பகுதிகளில் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மாடம்பாக்கம் பெரிய ஏரியின் தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளனர். ஆனால் இந்த ஏரியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. அதோடு ஏரியில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதோடு குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் எண்ணெய் கழிவுகள் ஏரி நீரில் கலந்து வருகிறது. இதனால் ஏரியின் தண்ணீர் நிறம் கருப்பு நிறமாக மாறி உள்ளது.

ஏரியில் ஆங்காங்கே தண்ணீரின் மேற்பரப்பில் எண்ணெய் படலம் உருவாகியும் காட்சியளிக்கிறது. இதனால் கடுமையான துர்நற்றம் விசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மாசடைந்து வரும் தண்ணீரை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே செயல்பட்டு வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் அனைத்து பகுதி மக்களுக்கும் தண்ணீர் தேவை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே இது போன்ற சமயங்களில் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரிலும் இது போன்ற பிரச்னைகள் இருந்தால் வரும் நாட்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து ஏரியை தூர் வாருவதோடு மீண்டும் ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டப்படாமல் இருக்கவும், ஏரியில் கழிவுநீர்கள் கலக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஏரியை சுற்றி மரங்கள் நடுவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி செய்து வருங்கால சந்ததியினருக்கு உதவும் வகையில் ஏரியை பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.

The post கழிவுநீர், குப்பை, இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் மாசடைந்து வரும் மாடம்பாக்கம் ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madambakkam Lake ,Tambaram ,Madambakkam ,Public Works Department ,durwari ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை...