பாஸி நிதி நிறுவன மோசடியில் ரூ.3 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் சிபிஐ விசாரணையை எதிர்த்த ஐஜி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாஸி நிதி நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கையும், நிதிநிறுவன பெண் இயக்குனரிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய ஐஜி பிரமோத்குமார் உள்ளிட்ட போலீசார் மீதான வழக்கையும் சிபிஐக்கு மாற்றியது சரிதான் என்று உத்தரவிட்டுள்ள  சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை கோரி பிரமோத்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த பாஸி நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் கே.மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோருக்கு எதிராக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் இயக்குனர் கமலவள்ளி கடத்தப்பட்டதாக அவரது டிரைவர் புகார் அளித்தார். சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி  ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் வி.மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோர் தன்னிடம் இருந்து 2 கோடியே 95 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேலூர் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஆய்வாளர் வி.மோகன்ராஜ், அப்போதைய மேற்குமண்டல ஐஜி பிரமோத்குமாரின் அறிவுறுத்தல்படி இந்த சம்பவத்தில் தலையிட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பிரமோத் குமாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நிதிநிறுவன மோசடி வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி லோகநாதன் என்ற முதலீட்டாளரும், பாஸி நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கையும், போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குகளை விசாரித்து கோவை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஐஜி பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுக்களை மீண்டும் விசாரித்து அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளித்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நிதி நிறுவனம் பல்வேறு நாடுகளில் கம்பெனி தொடங்கி நடத்தி வந்ததால், இந்த குற்ற வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சரிதான். மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட பிறகும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததும், ஐஜி பிரமோத் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரிக்க தகுதியான வழக்குதான் என்று கூறி இரு வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றிய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. ஐ.ஜி பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தொடரலாம் என்று உத்தரவிட்டார்.

Related Stories:

More