×

அவசர கால பயன்பாடு கோவாக்சினுக்கு அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தில் செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், கோவிஷீல்டின் அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்க கோரி, அது தொடர்பான ஆவணங்களை முதல் முறையாக கடந்த ஏப்ரலில் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்தது. கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் மற்றும் நிலைத்தன்மை குறித்த உத்தரவாதம் அளிக்கும் ஆவணங்கள், சான்றுகளை கடந்த ஜூலையில் அளித்தது. இதனை ஆராய்ந்த உலக சுகாதார அமைப்பு, அதன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிப்பதாக கூறி இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில், நீண்ட கால இழுபறிக்கு பிறகு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு கோவாக்சினை அவசர கால பயன்பாட்டிற்கான பட்டியலில் சேர்த்து நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில், ``இந்த ஒப்புதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிக்கு கிடைத்த அனுமதி மட்டுமே. குழந்தைகள் தடுப்பூசிக்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை,’’ என்றனர். கோவாக்சின் கொரோனா தொற்றுக்கு எதிராக 77.8 சதவீதமும், உருமாறிய டெல்டா வகை வைரசுகளுக்கு எதிராக 65.2 சதவீதமும் பாதுகாப்பு அளிக்கிறது.

* ஓராண்டு காலாவதி
பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `கோவாக்சின் தடுப்பூசியின் காலாவதி தேதியை ஒரு வருடமாக நீட்டித்து ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தடுப்பூசியின் ஸ்திரத்தன்மை பற்றிய கூடுதல் தரவுகளின் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Kovacin ,Emergency ,World Health Organization , Accreditation of Kovacin for Emergency Use: World Health Organization Announcement
× RELATED இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான...