கல்பாக்கம் அருகே பரபரப்பு நடுக்கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம மூட்டை: போதைப்பொருளா என போலீஸ் விசாரணை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றபோது, நேற்று முன்தினம் மாலை வலையில் ஒரு மர்ம மூட்டை சிக்கியது. இதனால், பரபரப்பு ஏற்பட்டநிலையில், மூட்டையில் இருப்பது போதைபொருளா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்பாக்கம் அருகே கடலூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் குமார் (40). இவரும், அப்பகுதியை சேர்ந்த 3 பேரும் நேற்று முன்தினம் கடலுக்குள் மீன்பிடிக்க படகில் சென்றனர். பின்னர், மாலை நடுக்கடலில் அவர்களின் வலையில் ஒரு மூட்டை சிக்கியது. அது அதிக பளுவாக இருந்ததால் பெரிய மீனாக இருக்கும் என கருதி வலையை இழுத்தனர்.

அதில், வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய மூட்டை இருப்பது தெரியவந்தது. அவற்றை படகில் ஏற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். அது மர்ம பொருளாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், கூவத்தூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அந்த மூட்டையை பிரித்து பார்த்ததில், அதில், 20 கிலோ எடையிலான வெள்ளை நிற பவுடர் கட்டியாகி இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டையை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பவுடர் என்ன பொருள், எப்படி கடலுக்கு வந்தது, அது கோகைன் போன்ற போதை பொருளாக இருக்குமோ என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கடலோர காவல் படையினர் விரைந்து வந்து, அந்த மூட்டையை கைப்பற்றி, அது என்ன பவுடர், போதை பொருளா என ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்து வருகின்றனர்.

Related Stories: