×

பாதுகாப்பு கேட்டு நெல்லை டிஐஜியிடம் மனு ரூ.11 கோடி நகைகளை ஏமாற்றி விட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்: மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் தொழிலதிபர் புகார்

நெல்லை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகளை ஏமாற்றி மோசடி செய்து விட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை சரக டிஐஜியிடம் கேரள பெண் தொழிலதிபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி ஷர்மிளா (40). இவர் நேற்று காலை தனது கணவர்  மற்றும் உறவினர்களுடன் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவை சந்தித்து அளித்த புகார் மனு: நானும், எனது கணவரும் சேர்ந்து பெங்களூரு  மற்றும் கேரள மாநிலம் திருவல்லாவில் பிரபல ரெடிமேட் நிறுவனத்தின் எக்ஸ்குளுசிவ் ஷோரூமை பிரான்சைஸ் அடிப்படையில் நடத்தி வருகிறோம். தஞ்சையில் நடந்த ஒரு திருமண  நிகழ்ச்சியில் 2013ம் ஆண்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், எனது கணவரும் அறிமுகமானார்கள்.

பின்னர் விஜயபாஸ்கர் பெங்களூரு வந்து செல்லும் போதெல்லாம், பெங்களூர் மல்லேஸ்வரம் ஓரியன்மாலில் உள்ள எங்களது கடைக்கும், பன்னாருகட்டாவில் உள்ள எங்கள் வீட்டிற்கும் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்களுடன் இணைந்து முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் பிரபல நகைக்கடை  உரிமையாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால், அவர்களை அறிமுகப்படுத்தும்படி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி கேட்டுக் கொண்டனர். அதன்படி நான் அறிமுகம் செய்து வைத்தேன்.

பின்னர் 2016ம் ஆண்டு அந்த நகைக்கடை உரிமையாளருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2016 நவ.8ம் தேதி எர்ணாகுளம், கோட்டயம் காவல்நிலையங்களில் எங்கள் மீது போலி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் காவல்துறையின் செல்வாக்கை பயன்படுத்தி, நான் ரூ.14  கோடிக்கு முறையாக வரி செலுத்தி ரசீது பெற்று வங்கிக் கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்து  வாங்கிய நகைகளை சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்து அதனை அபகரிக்க திட்டமிட்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த நகைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறும், அதை பணமாக மாற்றி தொழிலில் முதலீடு செய்து விடுவதாகவும், நகைகளை திருப்பிக் கேட்கும் போது அதற்கு ஈடாக பணம் தருவதாகவும் நம்பிக்கை அளித்தார். அதன் பேரில் அந்த நகைகளை மூன்று பகுதிகளாக பிரித்து சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திலும், கோவையில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டிலும், நானும், எனது கணவரும் 2017 ஜனவரியில் காரில் கொண்டு வந்து ஒப்படைத்தோம். 2018ல் எங்களுக்கு தொழில் நிறுவனம் ஆரம்பிப்பதற்காக விஜயபாஸ்கரிடம் நகைகள் அல்லது அதற்கு ஈடான பணத்தை கேட்ட போது, வருமானவரித்துறை சோதனையிலும், குட்கா வழக்கு சோதனையிலும், சிபிஐ மேற்கொண்ட சோதனையிலும் தனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பணத்தை இப்போது தர முடியாது என்றும் கூறினார்.  

நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் 2019ல் சென்னையில் ஒரு ஓட்டலில் வைத்து ரூ.3 கோடி மட்டும் கொடுத்தார். விஜயபாஸ்கருடன் அவரது நண்பர்கள் டாக்டர்கள் சித்தரஞ்சன், செந்தில்குமார், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் தொகையை கொடுத்து, இனி பணம் எதுவும் கேட்டால், உன்னையும், உனது மனைவியையும் கொன்று கல்குவாரியில் புதைத்து விடுவேன் என்று மிரட்டினார். அவர் ஆளுங்கட்சி அமைச்சராக இருந்ததால் புகார் மனு கொடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் எனக்கும், எனது கணவருக்கும் உயிருக்கு ஆபத்து  ஏற்படும் என்பதால், கேரளாவில் தங்கியிருந்தேன். தற்போது நான் தமிழக  டிஜிபியிடம் புகார் அளிக்க வேண்டியுள்ளது.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும்  சூழ்நிலை உள்ளதால், நான் கேரளாவிலிருந்து கொல்லம் மற்றும் தென்காசி வழியாக  நெல்லையில் உள்ள எனது வழக்கறிஞரை சந்திப்பதற்கும், சென்னை காவல்துறை  இயக்குநரிடம் புகார் அளிப்பதற்கும், நான் நீதிமன்றம் செல்வதற்கும் காரில் வர வேண்டியிருப்பதால் எனக்கும், எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சமீபத்தில் தான் சோதனை  நடந்தது. ஏற்கெனவே அவர் மீது குட்கா ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு  புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், நெல்லை சரக டிஐஜியிடம் கேரள பெண் தொழிலதிபர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Manu ,Paddy Diji ,Maji Minister C. ,Kerala ,Vijayabaskar , Nellai petitions DIG for security, cheats Rs 11 crore worth of jewelery and threatens to kill: Kerala woman entrepreneur complains against former minister C. Vijayabaskar
× RELATED வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக...