×

ரூ.169.11 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்து 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி, மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நல திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக  169  கோடியே 11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  121 அரசு பள்ளிக் கட்டடங்கள், கிளை நூலகக் கட்டடம் மற்றும் ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி  வாயிலாக திறந்து வைத்தார்.

நபார்டு திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், திருவள்ளூர்,  திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 65 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 114 கோடியே 88 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்;

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 45 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 9 உண்டு உறைவிடப் பள்ளிகளில் 49 கோடியே 24 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்;

சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து    சிவகங்கை மாவட்டம், செம்பனூர், மெய்யம்மை காசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கொண்ட கட்டடம்;மாவட்ட கனிமவள நிதியிலிருந்து திருப்பூர் மாவட்டம், புக்கலம், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைக் கட்டடம்;  

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தில் 63 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகம்; மதுரை மாவட்டம் - அவணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்  நலநிதியிலிருந்து  3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை ஆசிரியர் இல்லக் கட்டடம்;
என மொத்தம் 169  கோடியே 11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
2021-22ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக  செயல்படுத்தப்படும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகவும், புதுமையாகவும் செயல்படுத்தும் கற்போர் மையங்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒரு மாவட்டத்திற்கு தலா 3 மையங்கள் வீதம்  38  மாவட்டங்களில் 114 மையங்களைத் தெரிவு செய்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வி ஆணையர்
திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப., பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் முனைவர் பெ. குப்புசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,MK Stalin , நபார்டு திட்டம்
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...