மஞ்சூரில் விடிய, விடிய கொட்டிய மழையால் பல இடங்களில் மண் சரிவு; வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது-குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாரதி நகரில் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை முதலே விட்டு, விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் மழை வலுத்ததுடன் இரவு முழுவதும் விடிய, விடிய கன மழை பெய்தது. இடைவிடாமல் கொட்டிய மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடி தாழ்வான குடியிருப்புகளில் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிகுள்ளாகினர்.

தொட்டகம்பை பிக்கட்டி சாலையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. செடி, கொடிகளுடன் மண் திட்டுகள் இடிந்து நடுரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சாலை பணியாளர்கள் மற்றும் ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த மண் சரிவு மற்றும் செடி, கொடிகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதேபோல், தொட்டகம்பை பாரதிநகர் பகுதியில் பெய்த கனமழைக்கு நள்ளிரவு 1 மணியளவில் சந்திரகலா என்பவரது வீட்டின் முன்புற தடுப்புச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது சந்திரகலா, அவரது கணவர் மற்றும் மகன்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து வெளியேற முடியாதபடி வாசலோடு ஒட்டி கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று காலை குந்தா தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் வேடியப்பன், கிராம நிர்வாக அலுவலர் லதா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதேபோல், பூதியாடா பகுதியில் சாலையோர மண் திட்டு சரிந்து ரோட்டில் விழுந்தது. இப்பகுதியை சேர்ந்த சாமன் என்பவரது வீட்டின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டது. காந்திபுரம் பகுதியில் பெய்த மழையில் மண் சரிவு ஏற்பட்டு கீழ்புறம் இருந்த மாரியம்மாள் என்பவரின் வீட்டின் மீது விழுந்தது.

சேரனுார் உள்பட மஞ்சூரை சுற்றிலும் பல இடங்களில் வீடுகளின் பின்புறம் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மஞ்சூரில் நேற்றும் மழை தொடர்ந்து பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளான அவலாஞ்சியில் 66 மி.மீ., கிண்ணக்கொரையில் 66 மி.மீ., கெத்தையில் 42 மி.மீ., குந்தாவில் 39 மி.மீ., அப்பர்பவானியில் 35 மி.மீ., எமரால்டில் 30 மி.மீ., பாலகொலா பகுதியில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories:

More