×

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி: பட்டையை கிளப்பினார் பட்லர்: கேப்டன் மோர்கன் பாராட்டு

ஷார்ஜா: ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 35 ரன்களுக்கு ஜோசன் ராய், மலான், பேர்ஸ்டோ ஆகிய முக்கிய விக்கெட்களை இழந்து தவித்தது. முதல் பத்து ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இங்கிலாந்து அணி  பட்லர்- கேப்டன் மோர்கன் கூட்டணியின் அதிரடியால் ரன்விகிதம் அதிகரித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து டி20ல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. இதனால் 19 ஓவரில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை பறிகொடுத்து தோல்வியடைந்தது. ஆல்ரவுண்டர் ஹசரங்கா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட இங்கிலாந்து அணி உறுதி செய்தது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.

வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் கூறுகையில், ``இன்றிரவு எங்கள் அணி அனைத்து துறையிலும் பிரகாசித்தது. நம்பமுடியாத அளவிற்கு அனைவரது ஆட்டமும் இருந்தது. முதல் 10 ஓவர்கள் கடுமையாக இருந்தது. பின்னர் நிலைமை மாறியது. பட்லர் சிறந்த இன்னிங்ஸ் ஆடினார். அவரது மட்டையால் பட்டையை கிளப்பினார். உண்மையிலேயே சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். அவர் நம்பமுடியாத அளவுக்கு திறமையானவர், அமைதியானவர். எங்கே எப்படி ஸ்கோர் செய்யவேண்டும் என்பதை உணர்ந்து வெளுத்து வாங்கிவிடுவார். அவர் வேகமெடுத்துவிட்டால் எந்த பந்துவீச்சாளரையும் தண்டித்துவிடுவார். இலங்கை அணியினரும் முடிந்தவரை போராடினார்கள்.  நான்கு வெற்றிகளால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்றார்.

Tags : England ,Sri Lanka ,Butler ,Captain Morgan , England, win
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!