பிடிவாரண்ட் எச்சரிக்கை எதிரொலி பாலியல் புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜர்: சிசிடிவி பதிவை பென்டிரைவில் வழங்க உத்தரவு

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்கு சென்ற இடத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு டிஜிபி தரப்பில், இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய மனுவும், எஸ்பிதரப்பில் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய மனுக்களையும் விழுப்புரம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில் கடந்த 29ம்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. இதனையடுத்து 1ம்தேதிக்கு (நேற்று) வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றையதினம் அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும், இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். அதன்படி, நேற்று இவ்வழக்கு நீதிபதி கோபிநாதன்  முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்கள் தெளிவாக இல்லை, அதனை தெளிவாக சமர்ப்பிக்க வேண்டும் என  சிறப்பு டிஜிபி தரப்பில் கோரப்பட்டது. மேலும் சி.சி.டி.வி கேமரா காட்சிப் பதிவுகளையும் சமர்ப்பிக்க அவரது வக்கீல்கள் கோரினர். அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கு சம்மந்தமான ஆதாரங்களை பென்டிரைவில் சிறப்பு டிஜிபிக்கு வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: