×

கன்னட திரையுலக பவர் ஸ்டாருக்கு பிரியாவிடை 21 குண்டுகள் முழங்க புனித் உடல் அடக்கம்: கண்ணீர் கடலில் இறுதி ஊர்வலம்

பெங்களூரு: பெங்களூருவில் மாரடைப்பால் உயிரிழந்த கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் நேற்று 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கண்ணீர் கடலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரியாவிடை கொடுத்தனர். கன்னட திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் நடிகர் புனித் ராஜ்குமார். ‘பவர் ஸ்டார், அப்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர், கடந்த வெள்ளிக்கிழமை காலை உடற்பயிற்சியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர மாரடைப்பால் இறந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக ெபங்களூரு கண்டீரவா உள்விளையாட்டு அரங்கில் புனித் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மழை, பனியையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக நீண்ட வரிசையில் நின்று பல லட்சம் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 புனித் உடலுக்கு கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்,  முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், இந்தி திரைப்பட உலகினர்  அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அமெரிக்காவில் படித்து வரும்  புனித்தின் மகள் துருதி, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்குதான் விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அவர் தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுததும், தலையை வருடி, அவரை எழுப்பியதும்  காண்போரை கண்கலங்க செய்தது.

புனித் திடீரென இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் 6 ரசிகர்கள் இறந்தனர். 4 பேர் தற்கொலைக்கு முயன்று தப்பினர். இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி புனித்தின் உடலுக்கு நேற்று காலை இறுதிச்சடங்கு நடந்தது.  இதற்காக, அதிகாலை 2 மணியுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டது. அதிகாலை 3.10 மணிக்கு குடும்ப வழக்கத்தின்படி பூஜைகள் தொடங்கி, 4.10 மணிக்கு முடிந்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித்தின் உடல் வைக்கப்பட்டு, 7 கிமீ தூரம் ஊர்வலமாக கண்டீரவா ஸ்டுடியோவுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு காலை 6.30 மணி முதல் 7.10 மணி வரை ஈடிகா வகுப்பினரின் வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டது.

 அதை ெதாடர்ந்து, 21 குண்டுகள் முழங்க போலீசாரின் அணி வகுப்பு மரியாதை நடத்தப்பட்டதும், புனித் உடல் மீது போர்த்தி இருந்த தேசியகொடியை போலீசார் எடுத்து முதல்வர் பொம்மையிடம் கொடுத்தனர். அவர் அதை புனித்தின் மனைவி அஷ்வினியிடம் கொடுத்தார். காலை 7.20 மணிக்கு பெற்றோர் சமாதி அருகில் தோண்டப்பட்டிருந்த குழியில் புனித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித்தின் அண்ணன் ராகவேந்திர ராஜ்குமாரின் மகன் வினய் ராஜ்குமார் இறுதி சடங்குகள் செய்தார். இதில், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.ேக.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் மாறிய நேரம்
புனித் உடலுக்கு நேற்று காலை சடங்குகள் செய்த பிறகு, ஊர்வலமாக எடுத்து சென்று காலை 10 மணிக்கு அடக்கம் செய்யவே முதலில் திட்டமிடப்பட்டது. அந்த திட்டம் நள்ளிரவில் மாற்றப்பட்டு, அதிகாலை 3.10 மணிக்கு சடங்குகள் தொடங்கி 4.10 மணிக்கு முடிக்கப்பட்டது. பின்னர், வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று காலை 7.20 மணிக்கே அடக்கம் செய்யப்பட்டது.

144 தடை உத்தரவு
புனித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்திற்குள் இந்த வாரம் முழுவதும் பொதுமக்கள் செல்வதை தடுக்க, மாநகர போலீசார் 144 வது தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். குடும்பத்தினர் தினமும் வந்து பூஜைகள் செய்ய உள்ளதால், அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்க்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உப்பு, திருநீறு மூலம் மூடப்பட்டது
புனித் உடலை குழியில் இறக்கிய பின், உடலை வாழை இலையால் மூடினர். பின் உப்பு, திருநீரு, கரித்துள் ஆகியவற்றை போட்டனர். பள்ளத்தின் பாதி அளவுக்கு உப்பு, திருநீர் போட்டபின் மண் கொண்டு முழுமையாக மூடினர். பின் தலை பகுதியில் துளிசி ெசடி வைத்தனர்.

புனித் நெற்றியில் முத்தமிட்டு கண்ணீர் விட்ட பொம்மை
கடந்த வெள்ளிக்கிழமை புனித் இறந்தது முதல் நேற்று வரையில் முதல்வர் பொம்மை, தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். கண்டீரவா உள் விளையாட்டு அரங்கிற்கு அடிக்கடி வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். நேற்று அதிகாலை 3 மணிக்கு கண்டீரவா விளையாட்டு அரங்கம் வந்த அவர், அலங்கார வண்டியில் ஏற்றும் முன்பாக புனித்தின் உடலுக்கு முத்தமிட்டு கண்ணீர் சிந்தினார்.

Tags : Kannada , Kannada Movie, Power Star, Sacred Body
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...