காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ‘மணற் சிற்பம்’: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்

சென்னை: காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள ‘மணற் சிற்பத்தை’ போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் துப்பாக்கிகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறை சாாபில் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒரு வாரம் வீர வணக்கம் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் மாநகர முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மெரினா கடற்கரையில் காவல் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாநகர போக்குவர்துது காவல் மற்றும் ஐசிஏடி மீடியா கல்லூரி இணைந்து ‘மணற் சிற்பம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணற் சிற்பத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காலை திறந்து வைத்தார்.

முன்னதாக மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள பணியின் போது மரணமடைந்த காவலர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவர்தது கூடுதல் கமிஷனர் பிரதீப்குமார், இணை கமிஷனர் லோகநாதன், செந்தில் குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

More