தற்காலிக ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த கூலி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு வழங்கி கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 167 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 1.7.2018 முதல் 31.1.2020 வரை வழங்க வேண்டிய 19 மாத நிலுவை தொகையை  வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் ஊழியர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கழிப்பறை இல்லாத இடங்களில் பொது கழிப்பறை பயன்படுத்த ரூ.300 வழங்க கடந்த மாதம் 30ம் தேதி உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக பொது மேலாளர் லட்சுமி அனைத்து மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோ-ஆப்டெக்ஸில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ரூ.800ம், துணை மண்டல மேலாளர், கண்காணிப்பாளர்களுக்கு ரூ.400, விற்பனை பணியாளர்களுக்கு ரூ.300 மாதாந்திர அலவன்சு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு 1.7.2018 முதல் 31.1.2020 வரை வழங்க வேண்டிய 19 மாத நிலுவை தொகையை கணக்கிட்டு, அதில், 50 சதவீதம் இம்மாத  ஊதியத்துடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, 7 சதவீதம் ஊதிய உயர்வு மற்றும் 20 சதவீதம் வீட்டு வாடகை அலவன்சு உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நிலுவை தொகை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு கிடைக்கும்.

அதேபோன்று, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், குறைந்தபட்சம் மாதம் ரூ.500 முதல் ரூ.9 ஆயிரம் வரை தற்காலிக  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். தொடர்ந்து ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

Related Stories:

More