×

போலி நகைகளை அடகு வைத்து ரூ70.28 லட்சம் மோசடி: 6 பேர் சிறையிலடைப்பு

வேலூர்: வேலூர் அண்ணா சாலையில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மெயின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நகை கடன் குறித்து வங்கி நிர்வாகம் தணிக்கை மேற்கொண்டது. அப்போது, 15 வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வங்கியில் பணிபுரியும் இடையன்சாத்து பகுதியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் நித்தியானந்தம் என்பவர் தான் போலியாக நகைகளை அடகு வைத்து ரூ70.28 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் சீனியர் மேலாளர் பவானிசேகர், எஸ்பி செல்வகுமாரை சந்தித்து புகார் மனு அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக நகை மதிப்பீட்டாளர் நித்தியானந்தம்(58), அவரது நண்பர்களான அர்ஜுனன்(51), கணபதி(48), பாபு(48), தாராபாய்(39), வெங்கடேசன் (41) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சவுந்தரராஜன், சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், 8 பேர் 15 வங்கி கணக்குகளில் போலியாக தங்க நகைகளை வைத்து ரூ70.28 லட்சம் மோசடி செய்து பணத்தை வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் போலியாக அடகு ைவத்த தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: நகை மதிப்பீட்டாளரான நித்தியானந்தம் 2020ம் ஆண்டு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ70.28 லட்சம் மோசடி செய்துள்ளார்.

இதில் சவுந்தரராஜன் பெயரில் ரூ21 லட்சத்து 60 ஆயிரம், சுப்பிரமணி பெயரில் ரூ16 லட்சத்து 4 ஆயிரம், அர்ச்சுனன் பெயரில் ரூ9 லட்சத்து 15 ஆயிரம், கணபதி பெயரில் ரூ10 லட்சத்து 17 ஆயிரம், பாபு பெயரில் ரூ2 லட்சத்து 90 ஆயிரம், தாராபாய் பெயரில் ரூ4 லட்சத்து 67ஆயிரம், வெங்கடேசன் பெயரில் ரூ5 லட்சத்து 60 ஆயிரம் கடனாக பெற்று மோசடி செய்துள்ளார் என்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் வேலூர் ஜே.எம்.5 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



Tags : 70.28 lakh fraud by mortgaging fake jewelery: 6 jailed
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது