நீதியரசர்கள் முன்னிலையில் கோயில் நகைகளை பிரிப்பதற்கு தடை ஏதுமில்லை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!!

சென்னை: நீதியரசர்கள் முன்னிலையில் கோயில் நகைகளை பிரிப்பதற்கு தடை ஏதுமில்லை உயர்நீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி சென்னை  சூளை, அருள்மிகு அங்காள பரமேஸ்வரி, காசி விஸ்வநாதர் திருக்கோயில், சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சீனிவாச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களிள் மேம்பாடு குறித்து இன்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.  

அங்காள பரமேஸ்வரி மற்றும் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் குடமுழுக்கு முடிந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டதால் உடனடியாக திருப்பணிகள் மேற்கொள்ள ஆய்வறிக்கை கேட்டுள்ளோம். திருக்குளங்கள் மற்றும் அன்னதானக் கூடங்கள், பராமரிப்பு இன்றி விரிசல் விட்டு பழுதடைந்த நிலையில் இருந்த கோயில் சுவர்கள், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பார்வையிட்ட அமைச்சர்  சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 1985ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 35 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. 2015ம் ஆண்டு திருப்பணி செய்வதற்கு ஒப்புதல் பெறபட்டு இன்று வரை பணிகள் நடைபெற்று வருவதை வருத்ததுடன் தெரிவித்த அமைச்சர் அவர்கள், விரைவில் இப்பணிகளை முடிக்கவும், இதற்கு தேவையான நிதியினை ஆணையர் பொதுநல நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

மேலும், சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் பார்வையிட்டு கோயிலை சுத்தமான பராமரிக்கவும், திருக்கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், திருக்கோயில் உள் வளாகத்தில் உள்ள தனியார் கட்டிடங்களை அகற்றவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது: தமிழகத்தில் திமுக கழகம் ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள முதுநிலை கோயில்களைஆய்வு செய்யும் பணி நடைபெற்று, அக்கோயில்களில் பக்தர்களின் நலனுக்காக அடிப்படை வசதிகள் உடனே நிறைவேற்ற உத்திரவிடப்பட்டு, அப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதே போல் 300 மேற்பட்ட முதுநிலை கோயில்களில் திருப்பணிகள் விரைந்து நடத்த உத்தரவிட்டு குடமுழுக்கு பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது அதற்கு அடுத்த கட்டமாக முதுநிலை இல்லாத கோயில்களில் ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளோம்.  தமிழக முதல்வர் அவர்கள் பெரிய, சிறிய கோவில்கள் என்ற பாகுபாடில்லாமல் பக்தர்களின் நலனுக்காக அனைத்து கோவில்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட்டுள்ளார் அதன்படி இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சென்னை ,காஞ்சிபுரம் ,வேலூர், திருவண்ணாமலை , உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் முடிவுற்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தின்போது ஒவ்வொரு கோயில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும், அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரின் நலன்கள் குறித்தும், திருக்கோயில்கள் பராமரிப்பு மற்றும் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவது ஆகியவை குறித்தும் கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெறும்.

நிச்சயம் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அடுத்த 5 ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் நிச்சயம் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோவிலில், கோயிலுக்கு சொந்தமான நகைகளை கணக்கிடும் பணியினை தமிழக முதல்வர் முதல்வர் அவர்கள் கடந்த 13ம் தேதி திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி, ஆகிய கோவில்களில் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு நீதியரசர்கள் முன்னிலையில் கோயில் நகைகளை கணக்கிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நகைகளை கணக்கீடு செய்யும் பணிக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி பணிகள் நடைபெறும். நீதிமன்ற உத்தரவை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

மேலும் தற்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு முன்பாகவே மாவட்ட அளவிலான மற்றும் ஒவ்வொரு திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறபட்டு வருகின்றன. தமிழக அரசின் மீதும், இந்து சமய அறநிலைத்துறை மீதும் எந்த குறையும் காணமுடியாத ஒரு சிலர் வேண்டும் என்றே, தங்களது சுய விளம்பரத்திற்காக, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இது சட்டத்தின் ஆட்சி. சட்டப்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வராக கழகத் தலைவர் தளபதி அவர்கள் பொறுப்பேற்ற உடன், ஏற்கனவே அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியில் உள்ள யாரையும் நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் கட்சிப் பாகுபாடின்றி அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நிர்வாக வசதிக்காகவும், நிதி சுமை காரணமாகவும் ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

ஆனால் அதற்காக அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போராட்டம் நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி மக்களுக்கான ஆட்சி. குறை சொல்பவர்களையும், நிறைகாணுகின்ற ஆட்சியாக, நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., இணை ஆணையர் ஹரிப்பிரியா, நிர்வாக அலுவலர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: